பிப்ரவரி 15 : நற்செய்தி வாசகம்
பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21
அக்காலத்தில்
சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று அவர் கேட்க, அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள்.
“ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “ஏழு” என்றார்கள். மேலும் அவர் அவர்களை நோக்கி, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————
“சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்”
பொதுக்காலத்தின் ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I யாக்கோபு 1: 12-18
II மாற்கு 8: 14-21
“சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்”
சோதனையை வென்ற ஜோ:
பத்தாம் வகுப்புப் படித்த ஜோவிற்குக் கணிதம் வரும் அளவுக்கு ஆங்கிலம் வராது. அதனால் அவன் ஆங்கிலத்தில் மிகவும் குறைவான மதிப்பெண்களையே பெற்றுவந்தான். சில நேரங்களில் அவன் ஆங்கிலத் தேர்வில் தோல்வியையும் தழுவினான். ஒருநாள் அவனுடைய வகுப்பில் ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. தேர்விற்கு ஜோ நன்றாகப் படித்து வந்திருந்தாலும், தேர்வு நேரத்தில் அவனுக்கு எதுவுமே நியாபகம் வரவில்லை.
இதற்கு நடுவில் அவனுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த அவனுடைய நெருங்கிய நண்பன் மில்டன் தேர்வினை நன்றாக எழுதுவது அவனுக்குத் தெரிந்தது. அவனைப் பார்த்து அப்படியே எழுதிவிட்டால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணமும் ஜோவின் மனத்தில் தோன்றி மறைந்தது. உடனே அவன் தன் நண்பன் மில்டனின் விடைத்தாளைப் பார்த்து வேகவேக எழுதினான். அதை ஜோவின் வகுப்பு ஆசிரியை பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஆனாலும், ஜோவின் நேர்மை அவருக்குத் தெரியும் என்பதால், எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தார்.
தேர்வுக்கான நேரம் முடிந்ததும், வகுப்பு ஆசிரியை எல்லாரிடமிருந்தும் விடைத் தாளை வாங்கிக் கொண்டிருந்தார். அவர் ஜோவிடம் வந்தபோது, அவன் தனது விடைத்தாளை இரண்டாகக் கிழித்து வைத்திருந்தான். “ஜோ! உனக்கு என்ன ஆயிற்று?” என்று வகுப்பு ஆசிரியை அவனிடம் கேட்டபோது, அவன் அழுதுகொண்டே, “தேர்வில் நான் பார்த்து எழுதி விட்டேன். அதனால் மனச்சாட்சி உறுத்தியதால் கிழித்துவிட்டேன்” என்றான். இதற்கு ஜோவின் வகுப்பு ஆசிரியை அவனிடம், “நீ தேர்வில் வேண்டுமானால் தோற்கலாம்; ஆனால், உனக்கு வந்த சோதனையில் நீ வெற்றிபெற்றுவிட்டாய்” என்று அவனை மனதார வாழ்த்தினார்.
ஆம், நாம் ஒவ்வொருவரும் நமக்கு வரும் சோதனையை வெற்றிகொள்ளவேண்டும். அதுவே நமக்கு நல்லது. இன்றைய இறைவார்த்தை, சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய முதல் வாசகம் இருக்கின்றது. நேற்றைய முதல் வாசகத்தில், “சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும்” என்ற யாக்கோபு, இன்றைய முதல் வாசகத்தில், “சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்” என்கிறார்.
இயேசுவே சோதிக்கப்பட்டார் எனில், சாதாரண மனிதர்களாகிய நாமும் சோதிக்கப்படலாம். ஆனாலும் நமக்கு வருகின்ற சோதனையை நாம் மனவுறுதியோடு தாங்கிக்கொள்ள வேண்டும். இங்கு யாக்கோபு சொல்லும் இன்னொரு முக்கியமான செய்தியையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அது என்னவெனில், சோதனை கடவுளிடமிருந்து அல்ல, நமது சொந்த தீய நாட்டத்திலேயே வருகின்றது என்பது. பலருக்கு இந்தத் தெளிவு இருப்பதில்லை. அதனாலேயே அவர்கள் கடவுளைக் கண்ட மேனிக்குச் சபிக்கின்றர்கள். ஆகவே, நாம் சோதனையில் விழுந்துவிடாமல் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் அவர்மீது நம்பிக்கை வைக்காமல், நம்பிக்கையின்றி இருப்பதைக் காண முடிகின்றது. இதுவும் ஒருவகையான சோதனைதான். எனவே, நாம் எவ்விதமான சோதனையிலும் விழுந்து விடாமல், சோதனையைத் தாங்கிக் கொள்ளும் மனம்வலிமையைப் பெற்று, பேறுபெற்றோர் ஆவோம்.
சிந்தனைக்கு:
சோதனைகளை வெல்வதே ஒவ்வொருவரின் இலட்சியமாக இருக்க வேண்டும்.
இனிமேலும் சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றன என்று பிதற்ற வேண்டாம்.
சோதனைகளை வெல்வதற்கான ஆற்றலை ஆண்டவர் தம் அடியாருக்கு நிச்சயம் அளிப்பார்.
இறைவாக்கு:
‘சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்து கொள்’ (சீஞா 2:1) என்கிறது சீராக்கின் ஞான நூல். எனவே, நாம் சோதனைகளை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு செய்து, சோதனையை வென்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.