வாசக மறையுரை (பிப்ரவரி 07)
பொதுக் காலத்தின் ஐந்தாம் வாரம்
திங்கட்கிழமை
I அரசர்கள் 8: 1-7, 9-13
II மாற்கு 6: 53-56
“அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்”
தொடுதலுக்கு வல்லமை உண்டு:
1920 களில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் தொடர்ந்து இறந்துகொண்டே வந்தனர். இதைப் பார்த்து அதிர்ந்துபோன மருத்துவர்கள் காரணம் புரியாமல் திகைத்தனர். இதற்கு ஒரு முடிவுகாண அவர்கள் பிற நாட்டில் இருந்த மருத்துவர்களைகூட உதவிக்கு அழைத்தனர். இவ்வாறு ஜெர்மனியிலிருந்து ஒரு மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டிருந்த பிரபல மருத்துவர் ஒருவர் தனக்குத் தெரிந்த சிகிச்சைகளையெல்லாம் அங்கிருந்த குழந்தைகளுக்கு அளித்துப் பார்த்தார். அப்படியிருந்தும் இறப்பு விகிதம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் ஜெர்மனியிலிருந்து உதவிக்கு அழைக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருநாள் மருத்துவமனையிலிருந்த வராண்டாவில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, மூதாட்டி ஒருத்தி தன்னுடைய இடுப்பில் குழந்தையைத் தூக்கிச் சுமந்துகொண்டு போவதைக் கவனித்தார். மூதாட்டியின் இடுப்பில் இருந்த அந்தக் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதைப் பார்த்த மருத்துவர், அவர் யார் என விசாரித்தார். முடிவில் அந்த மூதாட்டி மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் அன்னா என்பதும், அவளுடைய கையில் இருந்த குழந்தை அவளது பேரன் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ஜெர்மனியிலிருந்து வந்திருந்த மருத்துவர், அன்னா என்ற மூதாட்டியை மருத்துவமனையில் இருந்த குழந்தைகளைத் தொட்டுத் தூக்கச் சொன்னனர். அவளும் அவ்வாறே செய்ய, குழந்தைகள் யாவரும் விரைவில் நலமடைந்தனர். இதே முறை பிற மருத்துவமனைகளிலும் பின்பற்றப் பட்டதால், குழந்தைகளின் இறப்பு விகிதம் முற்றிலுமாகக் குறைந்தது.
ஆம், அன்னா என்ற அந்த மூதாட்டி வாஞ்சையோடு குழந்தைகளைத் தொட்டுத் தூக்கியதால், குழந்தைகள் விரைவில் நலமடைந்தனர். நற்செய்தியில் இயேசு மக்களை அன்போடு தொட்டதால் அவர்கள் நலமடைந்ததையும், மக்கள் அவரை நம்பிக்கையோடு தொட்டதால் அவர்கள் நலமடைந்ததையும் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என நினைத்துக் கொள்ளும் சிலர், மற்றவர்களைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் அவலம் இன்றைக்கும்கூடத் தொடர்கின்றது. இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறாக, தொழுநோயாளர்களையும், உடல் நலம் குன்றியவர்களையும் தொட்டு நலமாக்கினார். இதனால் மக்கள் எப்போதும் அவரை நெருங்கி வந்தனர். இன்றைய நற்செய்தியில் இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர் என்று வாசிக்கின்றோம்.
‘இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்’ என்கிற இந்தச் சொற்றொடரில் இரண்டு உண்மைகள் அடங்கி உள்ளது. ஒன்று, இயேசுவைத் தொட்ட யாவரும் நம்பிக்கையோடு தொட்டனர். இரண்டு, இயேசு தன்னை யாவரும் தொட அனுமதித்தது. அல்லது அவர் யாரையும் தீண்டத் தகாதவர்கள் எனக் கருதாதது.
இன்றைய முதல்வாசகத்தில், உடன்படிக்கைப் பேழை திருத்தூயகத்தில் அதற்குரிய இடத்தில் வைக்கப்படுவது குறித்து வாசிக்கின்றோம். திருத்தூயகத்தில் வைக்கப்படும் உடன்படிக்கைப் பேழையில் இருக்கும் ஆண்டவர் யூதர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்கும் ஆசி வழங்குகின்றார். ஆகையால், எல்லாருக்கும் நலமளிக்கும் ஆண்டவரை நாம் நம்பிக்கையோடு நாடிச் செல்வோம், அவர் நம்மைத் தொட அனுமதிப்போம்.
சிந்தனைக்கு:
ஆண்டவர் ஆள்பார்த்துச் செயல்படாதவர். அவர் வழி நடக்கும் நாம் எப்படி இருகின்றோம்?
தம்மை நம்பிக்கையோடு நாடி வருவோருக்கு ஆண்டவர் அருள்பாலிக்கின்றார்.
வாஞ்சையுள்ள தொடுதலின் மூலம் நமது அன்பை மற்றவருக்குப் பகிர்வோம்.
இறைவாக்கு:
‘அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார்’ (மத் 9:29) என்கிறது மத்தேயு நற்செய்தி நூல். இயேசு நமது உடலையும் உள்ளத்தையும் தொட, நம்பிக்கையோடு அவரை அணுகிச் சென்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.