உடன்பிறந்தஉணர்வு நிலை குறித்த திருத்தந்தையின்
உலக மனித உடன்பிறந்த உணர்வுநிலை தினம் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு, பிப்ரவரி 4ம் தேதி Abu Dhabi நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின்போது இஸ்லாமிய தலைமைக்குரு Ahmed Al-Tayyeb அவர்களுடன் இணைந்து மனித உடன்பிறந்த நிலை குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், தனது செய்தியில் அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
கையெழுத்துக்குப் பிறகான இந்த ஆண்டுகளில், நமது தனிப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை மதிக்கும் அதேவேளையில், வெறுப்பு, வன்முறை மற்றும் அநீதிக்கு எதிரான அரணாக மனித உடன்பிறந்த உணர்வுநிலையைக் கட்டியெழுப்ப அழைக்கப்பட்டுள்ளோம் என்ற விழிப்புணர்வில் நாம் சகோதரர் சகோதரிகளாக ஒன்றிணைந்துள்ளோம் என்றும் திருத்தந்தை அதில் கூறியுள்ளார்.
மனித உடன்பிறந்த உணர்வுநிலை என்பது அடிப்படை மற்றும் உலகளாவிய மதிப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது என்று கூறும் திருத்தந்தை அவர்கள், இது மக்களிடையே உறவுகளைப் புரிந்துகொள்ளவும், இதனால் துன்பப்படுபவர்களும், பின்தங்கியவர்களும் தாங்களும் இந்தச் சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக உணரும் நிலையை ஏற்படுத்தவும் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மனித உடன்பிறந்த உணர்வுநிலை என்ற பரஸ்பர உணர்வில், நிலையான வளர்ச்சி, சகிப்புத்தன்மை, உள்ளடக்கம், ஒருவர் ஒருவரைப் புரிதல் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் அமைதி கலாச்சாரத்தை உருவாக்கிட, நாம் அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், நாம் எங்கு இருக்கிறோம், எப்படி வாழ்கிறோம், நமது தோலின் நிறம், மதம், சமூகக் குழு, பாலினம், வயது, பொருளாதார நிலைமைகள் அல்லது நமது ஆரோக்கிய நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், நாம் அனைவரும் ஒரே கொடையின் கீழ் வாழ்கிறோம் என்ற உணர்வைப் பெற்றிடவேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
Comments are closed.