திருத்தந்தையின் சிந்தனைகள்
இறைவனின் மகிழ்வையும், புதியனவைகளையும் தினமும் நமக்கு வழங்கி நம்மைத் தூண்டவும், மாற்றி அமைக்கவும் உதவும் நற்செய்தியை தினமும் வாசிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் இறைவார்த்தை ஞாயிறுத் திருப்பலியை ஜனவரி 23, இஞ்ஞாயிறன்று நிறைவேற்றியபின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் விடுதலையும் ஆறுதலும் வழங்குவது குறித்து பேசும் இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டை இயேசு வாசித்தது குறித்துப் பேசும் ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள், அவர் தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டவராக இருந்ததைக் கண்டு வியப்புற்றனர் என்று கூறிய திருத்தந்தை, இயேசுவைப் போன்று ஒவ்வோர் அருள்பணியாளரும் மறையுரை வழங்கும்போது, அவர்கள் தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள் என்பதை மக்கள் கண்டுகொள்ளும் வகையில் அவர்களின் இதயங்களைத் தொடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நம் தினசரி வாழ்வை வழிநடத்தி, நமக்கு ஆறுதலையும், நம்மில் மாற்றத்தையும் கொணரும் நற்செய்தியை எடுத்துரைத்து வரும் அனைவருக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை.
உலகத்தில் இறைவனை நிரப்பும் நற்செய்திப் பகுதிகளைத் தினமும் வாசிக்கும் பழக்கத்தை நம்மில் உருவாக்குவோம் என்ற அழைப்பையும் விடுத்து தனது நண்பகல் மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை
Comments are closed.