நம்மை கடவுளுக்கு அருகாமையில் கொணரும் ஏழைகள்

விவிலியத்தை வாசிப்பதென்பது, நம் வாழ்வுப் பாதையில் நம்மை மனவுறுதியில் நிரப்பவும், கடவுளுக்கு நெருக்கமாக நம்மைக் கொண்டுசெல்லவும் உதவுகிறது என ஜனவரி 22, சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 23 ஞாயிற்றுக்கிழமையன்று, திருஅவையில் சிறப்பிக்கப்படவிருக்கும் இறைவார்த்தை ஞாயிறையொட்டி, சனிக்கிழமையன்று டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “தொலைக்காட்சியை அணைத்துவிட்டு விவிலியத்தைத் திறக்கவும், கைபேசியை அணைத்துவிட்டு நற்செய்தியைத் திறக்கவும் நமக்கு வலிமை தரும்படி இறைவனை வேண்டுவோம், இதன்வழி நாம் நம் பாதையில் கடவுளின் நெருக்கத்தையும், நாம் உறுதியால் நிரப்படுவதையும் உணர்வோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சனிக்கிழமை வெளிட்ட பிறிதொரு டுவிட்டர் செய்தியில், தற்போது இடம்பெற்று வரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்து எடுத்துரைத்து, நாம் பகிரும் பொது மதிப்பீடுகள் வழியாக அல்ல, மாறாக, நம்மை கடவுளுக்கு அருகாமையில் கொணரும் ஏழைகளுக்காக இணைந்து பணியாற்றுவதில் இவ்வொன்றிப்பு கிட்டும், பிறரன்பு பணிகளில் ஒன்றிணைந்து உழைப்பது கிறிஸ்தவ ஒன்றிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் கொணரும் என கூறியுள்ளார்.

மேலும், சனிக்கிழமையன்று உரோம் மறைமாவட்டத்திற்கு திருத்தந்தையின் பிரதிநிதி ஆயர், கர்தினால் Angelo De Donatis, Loreto மற்றும் Padova திருத்தலங்களுக்கான திருத்தந்தையின் பிரதிநிதி, பேராயர் Fabio  Dal Cin, Catholic Action அமைப்பின் இத்தாலியத் தலைவர் Giuseppe Notarstefano, இத்தாலியின் மூனறு ஆயர்கள் ஆகியோரை  திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.