சனவரி 21 : நற்செய்தி வாசகம்

தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19
இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் – அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
“தீமைக்கு நன்மை”
பொதுக்காலத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
I 1சாமுவேல் 24:2-20
II மாற்கு 3:13-19
“தீமைக்கு நன்மை”
கொல்ல வந்தவர்களுக்கு உணவு:
ஜெர்மனியில் உள்ள ஒரு சிற்றூரில் எல்லாரும் பிற சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்க, ஒரே ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை என்றால், தங்கள் இல்லத்தில் பாடல் பாடி இறைவனிடம் வேண்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக, அவ்வூரில் இருந்த ஒருசில மதவெறியர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, அவர்கள் கிறிஸ்தவக் குடும்பத்தை ‘ஒரு வழி பண்ண’ விரும்பினார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், கிறிஸ்தவக் குடும்பத்தில் இருந்த யாவரும், கதவைத் தாழிட்டுக்கொண்டு பாடல்பாடி, இறைவனை வழிபடத் தொடங்கினர். அப்போது அங்கு வந்த மதவெறியர்கள், கதவு பூட்டப்பட்டிருப்தைப் பார்த்துவிட்டு, வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே இறங்க முயற்சி செய்தனர். இதையெல்லாம் பார்த்த அந்த வீட்டில் இருந்த பெண்மணி, நம்மைத் தாக்க வரும் இவர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது அவருக்கு பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் வரும், “வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்” (உரோ 12:13) என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
உடனே அவர் உணவு தயாரித்து, அவர்கள் வீட்டிற்கு உள்ளே வந்ததும் அவர்களுக்கு உணவு பரிமாறினார். இதனால் அந்தக் கிறிஸ்தவக் குடும்பத்தைத் தாக்க வந்தவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தாங்கள் உடைத்த கூரையைச் சரிசெய்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்தவக் குடும்பம், தங்களைத் தாக்க வந்தவர்களுக்கு உணவு தந்து நன்மை செய்தது. இன்றைய முதல் வாசகத்தில், தாவீது தன்னைக் கொல்ல நினைத்த சவுலுக்கு நன்மை செய்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒருவரிடம் இருக்கும் பொறாமை, காழ்ப்புணர்வு அவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்குச் சவுல் பெரிய எடுத்துக்காட்டு. தாவீது அடைந்த பெயரையும் புகழையும் வெற்றியையும் தாங்கிக்கொள்ள முடியாத சவுல் அவரைக் கொல்ல, இஸ்ரயேலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அவரைத் தேடித் போகிறார். ஆனால், தாவீது தன்னைக் கொல்ல வந்த சவுலைக் கொல்வதற்கு வாய்ப்பிருந்தும், அவரைக் கொல்லாமல் விட்டுவிடுகின்றார். அப்போதுதான் சவுல் தாவீதை நோக்கி, “நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால், நானோ, உனக்குத் தீமை செய்தேன்” என்கிறார். பின்னர் அவர் தாவீதை நோக்கி, “நீ திண்ணமாய் அரசனவாய்” என்கின்றார்.
நற்செய்தியில் இயேசு பன்னிருவைத் தனது பணிக்காகத் தேர்ந்தெடுக்கின்றார். இந்தப் பன்னிருவரும் இயேசுவைப் போன்று தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய அழைக்கப்படுகின்றார்கள்.
எனவே, இயேசுவின் வழி நடக்கின்ற நாம் அவரைப் போன்று தீமை செய்கின்றவர்களுக்கும் நன்மை செய்து, அவரது உண்மையான சீடர்கள் என்பதை நமது வாழ்வால் நிரூபிப்போம்.
சிந்தனைக்கு:
 பொறாமை எல்லாத் தீமைகளுக்கும் வழிவகுக்கும்
 வெறுப்பு அல்ல, அன்பே உயர்வுக்கு வழி
 நமது வாழ்வே நாம் அறிவிக்கும் மிகப்பெரிய நற்செய்தி
இறைவாக்கு:
‘தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்’ (1பேது 3:9) என்பார் புனித பேதுரு. எனவே, நாம் தீமைப் பதில் தீமை செய்யாமல், இயேசுவைப் போன்று தீமைக்குப் பதில் நன்மை செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.