திருமண வாழ்வின் இன்ப துன்பங்களில் கடவுள் எப்போதும் உடனிருக்கிறார

கோவிட்-19 பெருந்தொற்றுப் பாதிப்புக்கள், மற்றும் அந்நோய் சார்ந்த கட்டுப்பாட்டு விதிமுறைகளால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் இக்காலக்கட்டத்தில், குடும்பங்கள் மீது தன் பாசத்தையும், அவற்றோடு தன் அருகாமையையும் வெளிப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி கையெழுத்திட்டு, ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்ட Amoris Laetitia அதாவது அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் ஐந்தாம் ஆண்டு நிறைவாக, கத்தோலிக்கத் திருஅவையில், 2021ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி Amoris Laetitia குடும்ப ஆண்டு துவக்கப்பட்டது. அந்த குடும்ப ஆண்டு, 2022ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி முதல், 26ம் தேதிவரை உரோம் நகரில் நடைபெறும் பத்தாவது உலக குடும்பங்கள் மாநாட்டுடன் நிறைவடையும்.

Amoris Laetitia குடும்ப ஆண்டையொட்டி, இவ்வாண்டு திருக்குடும்ப திருநாளாகிய டிசம்பர் 26, இஞ்ஞாயிறன்று, திருமணத் தம்பதியருக்கென்று வெளியிட்ட மடலில், திருமண வாழ்வின் இன்ப துன்பங்களில் கடவுள் எப்போதும் உடனிருக்கிறார் என்று, தம்பதியரை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு தனிநபரும், திருமணமான தம்பதியரும், குடும்பமும், இப்போது எந்தச் சூழல்களில் வாழ்கின்றார்களோ, அந்தச் சூழல்களில் அவர்களோடு, தாழ்ச்சி, பாசம் மற்றும், திறந்தமனத்தோடு உடன்பயணிக்க விரும்புகிறேன் என்றும் திருத்தந்தை அம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமான தம்பதியர் மீது கடவுளின் அளவில்லா அன்பு

குடும்ப வாழ்வின் அன்றாடச் சூழல்களில், இயேசு தொடர்ந்து பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை தன் மடலில் மையப்படுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, ஆபிரகாம் போன்று அனைத்துத் தம்பதியரும், திருமணத்தில், தங்களின் பெற்றோரின் இல்லத்தைவிட்டு வெளியேறி புது வாழ்வைக் கட்டியெழுப்ப ஒரு பயணத்தை மேற்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.

கடவுளோடு நமக்குள்ள உறவு, நம்மோடு உடன்பயணிக்கிறது, மற்றும், நம் இடங்களிலிருந்து பயணப்பட உதவுகிறது என்றும், குழந்தைகள் பிறந்து அவர்களின் வளர்ச்சி, வேலை, நோய் என, திருமண வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களிலும் நாம் தனியாக இல்லை என்பதை கிறிஸ்தவ நம்பிக்கை நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

குழந்தைகளைக் கொண்டிருக்க ஆர்வம்கொள்வது

குழந்தைகள்பற்றிய தன் சிந்தனைகளை இம்மடலில் பகிர்ந்துகொண்டுள்ள திருத்தந்தை, குழந்தைகள் எப்போதும் ஒரு கொடையாக உள்ளனர், அவர்கள், ஒவ்வொரு குடும்பத்தின் வரலாறை மாற்றுகின்றனர், அவர்கள், அன்புக்காக, நன்மதிப்புக்காக, நம்பிக்கைக்காக ஏங்குகின்றனர், எனவே பெற்றோராக இருப்பவர்கள், குழந்தைகள் கடவுளின் பிள்ளைகள் என்பதை உணரச்செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

குழந்தைகளை வளர்த்தெடுப்பது எளிதான பணி அல்ல என்றுரைத்த திருத்தந்தை, பிள்ளைகளும், பெற்றோருக்கு உதவவேண்டும் என்று கூறியுள்ளார்.

தம்பதியர், கடவுளின் பிரசன்னத்தைக் குறைவாக உணர்கின்ற குடும்பங்களோடு உடன்பயணித்து, பங்குத்தளங்கள் மற்றும், திருஅவைக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, திருமணமும் ஓர் அழைப்பு எனவும், புயல்நிறைந்த கடலில் படகுப்பயணம் மேற்கொள்வது போன்ற திருமண வாழ்வில், தம்பதியர் எப்போதும் தம் கண்களை இயேசுவின் மீது பதித்திருக்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும், வாய்ப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஒன்றுசேர்ந்து செலவழிக்கும் நேரம், தபத்தைவிட, புயல்கள் மத்தியில் ஓர் புகலிடமாக மாறும் எனவும் கூறியுள்ளார்.

தூங்கச் செல்வதற்குமுன், சமாதானத்தோடு செல்லவேண்டும் எனவும், குடும்பத்தில் தினமும் மாலை செபம் சொல்லவேண்டும், திருப்பலிக்குச் செல்லவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, மன்னிப்பு, காயங்களைக் குணப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

தயவுசெய்து, நன்றி, மன்னிக்கவும் போன்ற சொல்லாடல்கள் குடும்பங்களில் இடம்பெறவேண்டும் எனவும் அம்மடலில் கூறியுள்ள திருத்தந்தை, இளையோர் திருமணம் புரிய அஞ்சுவது, காலத்தைத் தள்ளிப்போடுவது பற்றியும், வயது முதிர்ந்தோர் குடும்பங்களில் மதிக்கப்படவேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.