டிசம்பர் 24 : நற்செய்தி வாசகம்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79
அக்காலத்தில்
திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————–
“அவர் மீட்பர் ஒருவர் தோன்றச் செய்தார்”
திருவருகைக் காலம் நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை
I 2 சாமுவேல் 1-5, 8b-12,15
II லூக்கா 1: 67-79
“அவர் மீட்பர் ஒருவர் தோன்றச் செய்தார்”
நிகழ்வு
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பங்குப்பணியாளராக இருந்தவர் பங்கு இல்லத்தின் முன்பு அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தபோது, இளைஞன் ஒருவன் கையில் ஒரு கூண்டைத் தூக்கிக்கொண்டு, அந்த வழியாக வந்தான். அந்தக் கூண்டில் பலவிதமான பறவைகள் இருந்தன..
பங்குப்பணியாளர் அவனைப் பார்த்ததும், “இந்தப் பறவைகளையெல்லாம் எங்கே பிடித்தாய், இவற்றையெல்லாம் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?” என்றார். அதற்கு அந்த இளைஞன், “நான் என்னுடைய தோட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கு இந்தப் பறவைகளைக் கண்டேன். அதனால் இவற்றை நான் வலை போட்டுப் பிடித்தேன். இந்தப் பறவையைக் கொண்டு சிறிது நேரம் விளையாடுவேன். பிறகு இவற்றை நான் என்னுடைய வீட்டில் வளரும் பூனைகளுக்கு இரையாகப் போடுவேன்” என்றான்.
பங்குப் பணியாளர் அந்த இளைஞன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய், “என்ன! இந்தப் பறவைகளையெல்லாம் உன்னுடைய வீட்டில் வளரும் பூனைகளுக்கு இரையாகப் போடப் போகிறாயா, நான் உனக்கு இருநூறு உரூபாய் தருகின்றேன். இவற்றை நீ எனக்கு தந்துவிடுவாயா?” என்றார். பங்குப் பணியாளர் தன்னிடம் உள்ள பறவைகளுக்கு இருநூறு உருபாய் தர முன்வந்துள்ளதை அறிந்த அந்த இளைஞன், “இந்தப் பறவைகளுக்குப் பாடவே தெரியாது, இவற்றைப் போய் இருநூறு உரூபாய் கொடுத்து வாங்குகிறீர்களே! சரி பரவாயில்லை” என்று சொல்லிவிட்டுத் தன்னிடம் இருந்த பறவைகளைக் கூண்டோடு பங்குப் பணியாளரிடம் கொடுத்துவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றான்.
இதற்குப் பிறகு பங்குப் பணியாளர் பறவைகள் கூண்டைப் பங்கு இல்லத்திற்குப் பின்பக்கம் கொண்டு சென்று, அதன் கதவைத் திறந்து, வெளியே விட்டார். அவை மிகவும் உற்சாகமாக வானில் பறந்து சென்றன.
அடுத்த வார ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலிக்குப் பங்குப் பணியாளர் பறவைகள் கூண்டோடு சென்றார். எல்லாரும் அதை ஆச்சரியமாகப் பார்ப்பதைக் கண்டதும், அவர் அவரகளிடம் நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லி, “இந்தப் பறவைகள் கூண்டை என்னிடம் கொடுத்தவன், இதிலிருந்த பறவைகளுக்குப் பாடத் தெரியாது என்றான்; ஆனால், நான் கூண்டைத் திறந்து விட்டபோது அவை, ‘மீட்பு கிடைத்துவிட்டது’, ‘மீட்பு கிடைத்துவிட்டது’ என்று பாடிக்கொண்டே மேலே பறந்து சென்றன” என்றார்.
ஆம், கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்த அந்தப் பறவைகளை வெளியே திறந்துவிட்டதன் மூலம், பங்குப் பணியாளர் அவைகளுக்கு மீட்பராய்த் திகழ்ந்து போல், மனிதர்களாகிய நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்கு ஆண்டவர், தாவீதின் குடும்பத்தில் வல்லமையுள்ள மீட்பர் ஒருவர் தோன்றச் செய்வார் என்று பாடுகின்றார் செக்கரியா. அது குறித்து நாம் சிந்திப்போம்.
Comments are closed.