டிசம்பர் 21 : நற்செய்தி வாசகம்
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45
அக்காலத்தில்
மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————–
“விரைந்து சென்ற மரியா!”
திருவருகைக் காலம் நான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை
I இனிமைமிகு பாடல் 2: 8-14
II லூக்கா 1: 39-45
“விரைந்து சென்ற மரியா!”
தக்க காலத்தில் உதவி:
இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வில்லியம் கிளாட்ஸ்டன். ஒருநாள் இரவு இவர், மறுநாள் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்காகக் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது இவரிடம் வந்த பெரியவர் ஒருவர், சாகும் தறுவாயில் இருக்கும் தன் மகனைப் பார்க்க வருமாறு கேட்டுக்கொண்டார். இவரும் அதற்கு மறுபேச்சு பேசாமல், குறிப்பெடுப்பதை அப்படியே விட்டு, அந்த இளைஞனைப் பார்க்கச் சென்றார். அவனோடு ஒருசில மணிநேரம் இருந்துவிட்டுத் இவர் தன்னுடைய வீட்டிகுத் திரும்பி வந்தார்.
வரும் வழியில் இவர், ‘நாளைய நாளில் நாடாளுமன்றத்தில் நான் நிகழ்த்தப்போகும் உரை நன்றாக இருக்குமோ, இருக்காதோ. அது பற்றி எனக்குக் கவலயில்லை; சாகும் தறுவாயில் இருந்த ஓர் இளைஞனுக்கு ஆறுதலாக அவனோடு ஒருசில மணி நேரம் இருந்துவிட்டேன். அது போதும்’ என்று மனநிறைவு அடைந்தார்.
ஆம், தேவையில் இருப்பவருக்கு (அது எந்த மாதிரியான தேவையாக இருந்தாலும்) தக்க நேரத்தில் உதவுவது மிகவும் முக்கியமானது. அதைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையும் நமக்கு உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
உற்ற காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விடப் பெரியது. இந்த உண்மையைத் திருவள்ளுவர், “காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” (குறள் எண் 102) என்ற குரள் மூலம் விளக்குவார்.
மரியாவின் நெருங்கிய உறவினர் எலிசபெத்து. திருமணமாகிப் பல ஆண்டுகள் குழந்தையின்றி இருந்த அவர், தம் முதிர்ந்த வயதில் கருவுற்றிருந்தார். இச்செய்தியை முதன்மை வானதூதர் வழியாக அறிய வரும் மரியா அவருக்கு உதவுவதற்கு, உடனிருப்பதற்கு, ஆறுதலாக இருப்பதற்கு அவர் இருந்த ஊருக்கு விரைந்து செல்கின்றார்.
தூய ஆவியாரால் கருவுற்றிருந்த மரியா, எலிசபெத்திற்கு உதவ வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயம் இல்லை. ஆனாலும், மரியா எலிசபெத்திற்கு உதவுவதற்காக விரைந்து செல்கின்றார். இதுதான் உண்மையான உதவி ஆகும். பலரும் உதவி என்று கேட்டால் செய்வார்கள். ஆனால், யாரும் கேளாமலேயே விரைந்து சென்று உதவுகின்றார் மரியா. இதன்மூலம் நாமும் தேவையில் உள்ளவர்களுக்கு அவர்கள் கேளாமலேயே விரைந்து சென்று உதவ வேண்டும்.
சிந்தனைக்கு:
எத்தனையோ பேர் தேவையில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவுவதே உண்மையான கிறிஸ்தவர்களுக்கு அழகு.
உதவி என்றால் பண உதவி மட்டும் கிடையாது. உடனிருப்பதும் பெரிய உதவிதான்.
ஒருவருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் இருந்தால் போதுமானது
இறைவாக்கு:
‘எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார் இயேசு’ (திப 10:38) என்கிறது இறைவார்த்தை. எனவே, நாம் மரியாவைப் போன்று இயேசுவைப் போன்று தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.