வாசக மறையுரை (டிசம்பர் 20)

திருவருகைக் காலம் நான்காம் வாரம்
திங்கட்கிழமை
I எசாயா 7: 10-14
II லூக்கா 1: 26-38
“உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்”
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் குறிப்பிடும் பறவை:
ஆங்கிலக் கவியான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எழுதிய ஒரு கவிதையில் ஒரு பறவையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அந்தப் பறவையானது நார்வேயில் பறந்துகொண்டிருந்தது. திடீரென அது பறந்துகொண்டிருந்த பகுதியில் புயல் வீசி, அதைத் தன் போக்கில் இழுத்துக்கொண்டு போனது. அந்தப் பறவைக்குப் புயலின் போக்கில் பறக்க விருப்பமில்லை. மாறாக, அது புயல் வீசிய திசைக்கு எதிர் திசையில் பறக்க முடிவு செய்தது. அது எவ்வளவோ முயற்சி செய்தும் அதனால் புயலை எதிர்த்துப் பறக்க முடியவில்லை. அதன் சிறகுகள் ஓய்ந்தன.
ஒருகட்டத்தில் அந்தப் பறவை தன்னால் புயலை எதிர்த்துப் பறக்க முடியாது என்பதை உணர்ந்ததும், அது புயலின் போக்கிலேயே பறந்து போனது. இதனால் அது இங்கிலாந்தில் உள்ள பசுமையான ஒரு காட்டுப் பகுதியில் இறங்கியது. அப்போது அந்தப் பறவை தனக்கு வேண்டிய எல்லாமும் இங்கிருக்கின்றது என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தது.
இந்த நிகழ்வில் இடம்பெறும் புயலை நம் கடவுளின் திருவுளத்தோடு ஒப்பிடலாம். எப்போதெல்லாம் அந்தப் பறவை புயலை எதிர்த்துப் பறக்க நினைத்ததோ, அப்போதெல்லாம் அதற்குக் காயங்கள் ஏற்பட்டுச் சோர்ந்து போனது. மாறாக, அது புயலின் போக்கில் பறந்து போனபோது, மிக அற்புதமான இடத்தை அடைந்தது. நாமும் கடவுளின் திருவுளத்திற்கு எதிராக நடக்கின்றபோது துன்பங்களுக்கு மேல் துன்பங்களைச் சந்திக்கின்றோம். அதே வேளையில், நாம் கடவுளின் திருவுளத்தின் படி நடக்கின்றபோது மிகுந்த ஆசியைப் பெற்றுகின்றோம்.
இன்றைய இறைவார்த்தை கடவுளின் திருவுளத்தின் படி நடக்காத, நடந்த இருவரைப் பற்றிக் கூறுகின்றது. அவர்களைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதா நாட்டை ஆண்டு வந்த ஆகாசு மன்னனுக்கு எதிரிகளிடமிருந்து ஆபத்து வந்தது. அப்போது அவன் ஆண்டவரின் துணையை நாடியிருக்கலாம்; ஆனால் அவன் ஆண்டவரின் துணையை நாடாமல், அவரது திருவுளத்தின்படி மனிதர்களின் உதவியை நாடுகின்றான். இதனால் இறைவாக்கினர் எசாயா அவனிடம், “…..என் கடவுளின் பொறுமையைக்கூட சோதித்துப் பார்க்கிறீர்களோ?” என்று சொல்லிவிட்டு, “இதோ கன்னிப்பெண் கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்” என்கிறார்.
ஆகாசு, சாதாரானமானவன் இல்லை. அவன் யூதா நாட்டு மன்னன். அப்படிப்பட்டவன் ஆண்டவரின் திருவுளத்தின் படி நடக்காத போது, சாதாரண ஒரு பெண்ணான மரியா, முதன்மை வானதூதர் கபிரியேலிடம், “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே நடக்கட்டும்” என்று சொல்லி, ஆண்டவரின் திருவுளத்தின் படி நடக்க முடிவு செய்தது வியப்பாய் இருக்கின்றது.
வானதூதர் கபிரியேல் கடவுளின் மீட்புத் திட்டத்தைப் பற்றி மரியாவிடம் சொன்னபோது, தான் கணவரை அறியாதவர் ஆயிற்றே என்று அவர் கலக்கமுறுகின்றார்; ஆனால் குழப்பமுறவில்லை. அதனால் அவர் ஆண்டவரின் திட்டம் நிறைவேறத் தன்னையே கையளிக்கின்றார். இவ்வாறு கடவுளின் மீட்புத் திட்டம் அவர் வழியாகச் சிறப்புகின்றது. ஆம், நாம் ஆகாசைப் போன்று கடவுளின் திருவுளத்திற்கு எதிராக அல்ல, மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப செயல்படவேண்டும். அப்பொழுதுதான் நமக்குக் கடவுளின் ஆசி அபரிமிதமாகக் கிடைக்கும்.

Comments are closed.