இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“அஞ்சாதே, நீ அவமானத்திற்கு உள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்;” என இறைவாக்கினர் எசாயா மூலம் ஆண்டவர் கூறுகிறார்.
நமது வாழ்க்கையில் நாம் பட்ட அவமானங்கள், வேதனைகளை கடவுள் ஒருவர் மட்டும் அறிவார். அவற்றிலிருந்து இறைவன் நம்மை மீட்டு பிறர் மத்தியில் நம்மை வாழ்வில் உயர்த்த வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 30:5-ல்,
“அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.” என கூறியிருப்பதை நாம் வாசித்தோம்.
நமது ஒவ்வொரு துளி கண்ணீரையும் ஆண்டவர் சேர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறார். நமது துக்கம் சந்தோஷமாக மாற இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.” என கூறப்பட்டுள்ளது.
ஆண்டவரின் இந்த திருவருகைக் காலத்தில் நமது வழியை நாம் ஆயத்தமாக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
கன மழைக்கு பின் குடி நீரினால் வரும் உடல் உபாதைகள், நோய்கள் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.