கலை, உடன்பிறப்பு உணர்வு மற்றும், நட்புறவை உருவாக்குகிறது

கிறிஸ்மஸ் ஒளி, உடன்பிறப்பு உணர்வை நாம் மீண்டும் கண்டுணரச் செய்கின்றது மற்றும், தேவையில் இருப்பவர்களோடு தோழமையைக் காட்டுவதற்கு நம்மைத் தூண்டுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் இசைக்குழு ஒன்றிடம், டிசம்பர் 15, இப்புதனன்று கூறினார்.

டிசம்பர் 16, இவ்வியாழன் மாலையில் வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கும், இசைக்கலைஞர்கள் மற்றும், அதனை ஏற்பாடுசெய்தவர்கள் என எழுபது பேரை, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தின் சிற்றரை ஒன்றில், இப்புதன் காலையில் சந்தித்து வாழ்த்திய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

கனிவு, மகிழ்வு, நம்பிக்கை

கடவுளின் கனிவை இவ்வுலகிற்கு கொண்டுவந்த நிகழ்வில் நம் கண்களைப் பதிக்குமாறு கிறிஸ்மஸ் அழைப்புவிடுக்கின்றது என்றும், இது நம்மில், மகிழ்வு மற்றும், நம்பிக்கையைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, இசைக்கலைஞர்களும், தங்களின் திறமைகளால், கனிவு, மகிழ்வு, நம்பிக்கை ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் முறைபற்றி அறிந்திருக்கிறார்கள் என்று, அக்குழுவினரிடம் கூறினார்.

கனிவு, மகிழ்வு, நம்பிக்கை ஆகிய உணர்வுகளை மையப்படுத்தி, இசைக்கலைஞர்களிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, கனிவு, அன்பில் பிறக்கின்றது என்றும், பெத்லகேம் குடிலில், புதிதாகப் பிறந்த குழந்தையின் அன்னையின் தழுவல், அவரது குடும்பத்தைப் பாதுகாக்கும் தந்தையின் அன்பு, அங்கு அவரை வணங்கவந்த இடையர்கள் போன்ற அனைவரிலும் இந்த உணர்வுகளைக் காண்கிறோம் என்றும் கூறினார்.

கலையில், உடன்பிறப்பு உணர்வு உடனடியாக உருவாக்கப்படுகிறது, அதில் நண்பர்கள், பகைவர்கள் என்ற பாகுபாடு கிடையாது, அனைவரும் சமம், அனைவரும் நண்பர்கள், மற்றும், அனைவரும் சகோதரர்கள் என்றுரைத்த திருத்தந்தை, இந்தக் கலைஞர்களின் பணி, ஒரு பலனுள்ள மொழி என்றும் கூறினார்.

கல்வி வழியாக வருங்காலம்

பெத்லகேம் குடிலில், மனித சமுதாயத்திற்கு நம்பிக்கை கிடைக்கின்றது எனவும், கோவிட் பெருந்தொற்று, இலட்சக்கணக்கான சிறார் மற்றும், வளர்இளம்பருவத்தினரின் அனைத்து கல்வி சார்ந்த செயல்பாடுகளையும் பாதித்துள்ளது எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையாடல் மற்றும், புறக்கணிப்புக் கலாச்சாரப் பரவலையும், இப்பெருந்தொற்று தடைசெய்துள்ளது என்று கூறினார்.

கல்வியில் முதலீடு செய்வது என்பது, சிறாரும், இளையோரும், தங்களின் வருங்காலத்தை நம்பிக்கையோடு நோக்குவதற்குத் துணிவையும், வாழ்வின் முக்கிய விழுமியங்களைக் கண்டுணரவும், அவற்றை மதித்துப் போற்றவும் உதவுவதாகும் என்றுரைத்துள்ள திருத்தந்தை, அமைதி, நீதி, அழகு, நன்மைத்தனம், சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு, நம்பிக்கையின் விதை, கல்வியில் உள்ளது என்று கூறினார்.

இளைய தலைமுறைகளுக்கு ஆதரவாக, மனத்தாராளத்தோடு நலத்திட்டங்களை மேற்கொண்டுவரும் கிறிஸ்மஸ் இசைக் குழுவினருக்கு தன் நன்றியையும், கிறிஸ்மஸ் நல்வாழ்த்தையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.