வாசக மறையுரை (டிசம்பர் 16)
திருவருகைக் காலம் மூன்றாம் வாரம்
வியாழக்கிழமை
I எசாயா 54: 1-10
II லூக்கா 7: 24-30
“உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது”
காப்பு அல்ல, நீதான் எனக்கு முக்கியம்:
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த கிறிஸ்டோபருக்கும், அதே பகுதியில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த லில்லிக்கும் மண ஒப்பந்தமாகி, ஓரிரு நாள்கள்தான் ஆகியிருந்தன. இந்த ஏற்பாட்டை இருவருடைய பெற்றோரே செய்திருந்தாலும், கிறிஸ்டோபர், லில்லி தனக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த வினாடியிலிருந்தே அவளை உயிருக்குயிராய் அன்பு செய்யத் தொடங்கினான். அதன் நிமித்தமாக அவன் அவளுக்கு ஒரு தங்கக் காப்பினைப் பரிசாக அளித்திருந்தான். கிறிஸ்டோபர் தனக்கு அளித்த தங்கக் காப்பினை கண்டு லில்லி மிகவும் உருகிப் போனாள். அதை அவள் மிகப் பத்திரமாக அணிந்துகொண்டாள்.
ஒருநாள் அவள், தான் பணிபுரிந்து வந்த பள்ளிக்குப் பேருந்தில் வந்தபோது, கூட்டம் மிகுதியாக இருந்தது. அதனால், கிறிஸ்டோபர் பரிசளித்த தங்கக் காப்பு கையில் இருந்தால் தவறி விழ வாய்ப்பிருக்கின்றது என்று அதைத் தன் கைப்பையில் எடுத்து வைத்துக் கொண்டாள். தான் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்ததும், பேருந்திலிருந்து இறங்கி, முதல் வேலையாகத் தன் கைப் பையைப் பார்த்தாள் லில்லி. அதில் தங்கக் காப்பு இல்லாததைக் கண்டு அதிர்ந்து போனாள்.
‘கிறிஸ்டோபர் ஆசையாகக் கொடுத்த பரிசாயிற்றே! இதை நான் தவறவிட்டது தெரிந்தால் அவன் எவ்வளவு வருத்தப்படுவான்’ என்று லில்லி புலம்பினான். முதலில் இதைக் கிறிஸ்டோபரிடமிருந்து மறைக்க நினைத்த லில்லி, எப்படியாது உண்மை தெரியத்தான் போகிறது என்று நடந்ததையெல்லாம் அவனிடம் ஒன்றுவிடாமல் சொன்னாள். தான் சொன்னதைக் கேட்டுக் கிறிஸ்டோபர் வருத்தப்படுவான் என்று லில்லி நினைத்தாள்; ஆனால், அவன் அவ்வாறு நினைக்கவில்லை. மாறாக, அவன் அவளிடம், “நான் கொடுத்த காப்பு தவறிவிட்டது என வருந்ததாதே! ஏனெனில், நான் கொடுத்த காப்பினை விடவும் நீ எனக்கு முக்கியம்” என்றான். இதனால் லில்லி கிறிஸ்டோபரை அன்போடு அணைத்துக் கொண்டாள்.
தான் அன்போடு கொடுத்த தங்கக் காப்பினை லில்லி தவறவிட்டபோதும், கிறிஸ்டோபர் அவள்மீது மாறாத அன்புகொண்டிருந்தது மிகவும் கவனிக்கத்தக்கது. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, “…..உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
உண்மைக் கடவுளை மறந்து, வேற்று தெய்வங்களை வழிபட்டதற்காக யூதா நாட்டினர் நிறையவே தண்டனையை அணுபவித்திருந்தார்கள். இத்தகைய வேளையில், அவர்கள் கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்து விட்டார்; மறந்து விட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான், ஆண்டவராகிய கடவுள் அவர்களிடம், “மலைகள் நிலைசாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது” என்கிறார். இதன்மூலம் கடவுள் பேரன்பு கொண்டவர்; அவர் நம்மீது கொண்டிருக்கும் அன்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
நற்செய்தியில் கடவுள் வைத்திருந்த திட்டத்தைப் பரிசேயர்கள் புறக்கணிப்பதையும், வரிதண்டுபவர்கள் ஏற்றுக்கொண்டு, மனம்மாறித் திருமுழுக்குப் பெறுவதையும் குறித்து வாசிக்கின்றோம். ஆம், கடவுள் நம்மீது பேரன்பு கொண்டிருந்தாலும், அவர் நமக்கென வகுத்திருக்கும் திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் கடவுளிடமிருந்து ஆசியைப் பெற முடியும்.
சிந்தனைக்கு:
கடவுள் நம்மைக் கண்டிக்கின்றார் எனில், அதுவும் அவரது பேரன்பின் வெளிப்பாடே!
கடவுளோடு நாம் ஒத்துழைக்காதபோது, அவர் தரும் ஆசிகளைப் பெற முடியாது.
மனிதர்கள் அன்பு மாறலாம். ஆண்டவரின் அன்பு ஒருபோதும் மாறாது.
இறைவாக்கு:
‘தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை நான் உங்களுக்குக் காட்டுவேன்’ (எசா 55:3) என்பார் ஆண்டவர். எனவே, நம்மீது மாறாத அன்பு காட்டும், ஆண்டவரின் திட்டத்திற்கு ஏற்ப நாம் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.