கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு தயாரிப்பு வழிகள்

கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வின் வழியாக கிறிஸ்துவுக்காகவும் அடுத்திருப்பவர்களுக்காகவும் எத்தகையச் செயல்களை ஆற்றி, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு நம்மைத் தயாரிக்க முடியும், என்ற கேள்வியை முன்வைப்போம்,  என ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய மகிழ்வின் ஞாயிறன்று, குழந்தைகள், பாலன் இயேசு திருஉருவத்தைக் கொணர்ந்து ஆசி பெறும் பாரம்பரியத்தை முன்னிட்டு, டிசம்பர் 12, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த சிறுவர் சிறுமியருக்கு ஆசி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் வாழ்க்கையை நல்லதை நோக்கி மாற்றியமைக்க விருப்பம்கொண்டு தன்னைத் தேடிவந்த மக்களுக்கு புனித திருமுழுக்கு யோவான் வழங்கிய அறிவுரைகள் குறித்து மூவேளை செபவுரைக்  கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மகிழ்வையும், வாழ்வு மாற்ற அனுபவத்தையும் தரவிருக்கும் மெசியாவின் வருகைக்காக தங்களைத் தயாரிக்க ஆவல் கொண்டு புனித திருமுழுக்கு யோவானை அணுகிய மக்களைப்போல், நாமும் இக்காலத்தில் நம்மைத் தயாரிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் எதற்காக அழைக்கப்பட்டுள்ளோம், என்னவாக மாறப் போகின்றோம் என்பது குறித்து ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்ற அழைப்பையும், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு முன்வைத்த திருத்தந்தை, நாம் இறைவனுக்கும் நமக்கும், நம் அயலவராகிய நம் சகோதரர் சகோதரிகளுக்கும் என்ன ஆற்றவேண்டும் என்பதை அடிக்கடி இறைவனை நோக்கிக் கேட்போம் எனவும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்து பிறப்பின் வருகைக்காக நம்மையே நாம் தயாரிக்கும் வேளையில், தனியே இருக்கும் மக்களையும், முதியோர் மற்றும் நோயுற்றோரையும் சென்று சந்தித்து உதவுதல், ஏழைகளுக்குப் பணியாற்றுதல், நம் தவறுகளுக்காக மன்னிப்பை வேண்டுதல், கடனைத் திருப்பியளித்தல், தவறாகப் புரிந்துகொண்டுள்ளவைகளைத் தெளிவாக்குதல், இன்னும் அதிகமாகச் செபித்தல் என, பல்வேறு பெரிய, மற்றும் சிறிய வழிகள் வழியாக நம்மைத் தயாரிக்க முடியும் என விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறன்று சிறுவர் சிறுமிகள்,  கிறிஸ்மஸ் குடிலில் வைக்கும் பாலன் இயேசு திருவுருவத்தை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கொணர்ந்து ஆசீர் பெறும் பாரம்பரியம், திருத்தந்தை புனித  6ம் பவுல் அவர்களால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கிவைக்கப்பட்டது.

Comments are closed.