திருத்தந்தை, பிரான்ஸ் ஆயர்கள் சந்திப்பு
பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் குழு ஒன்று, திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடியபின்னர், செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, இச்சந்திப்பின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தது.
ஆயர்கள் நடத்துகின்ற ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் அறிக்கையை திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பது வழக்கமாக இடம்பெறும் ஒரு நிகழ்வு எனவும், இவ்வாண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி முதல், 8ம் தேதி வரை, லூர்து நகர் திருத்தலத்தில் இக்கூட்டம் நடைபெற்றது எனவும், பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Éric de Moulins-Beaufort அவர்கள், செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பிரான்ஸ் கத்தோலிக்கத் திருஅவைக்குள், 1950ம் ஆண்டு முதல், சில அருள்பணியாளர்களால், ஏராளமானோர் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று CIASE வெளியிட்ட அறிக்கையை, ஆயர்களாகிய நாங்கள் எங்களின் ஆண்டுக் கூட்டத்தில் மேற்கொண்ட மாண்புடன்கூடிய ஆய்வு மனநிலையை திருத்தந்தை பாராட்டினார் என்று, ஆயர் de Moulins-Beaufort அவர்கள் கூறினார்.
அதோடு, ஒருங்கிணைந்த பயணப் பாதையில் தொடர்ந்து செயல்படுமாறும் திருத்தந்தை ஊக்கப்படுத்தினார் என்று உரைத்த ஆயர் de Moulins-Beaufort அவர்கள், பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும், கிறிஸ்து ஆகியோரின் முன்னிலையில் தங்களை நிறுத்தி, ஓர் ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்ளவேண்டிய சவாலை ஆயர்கள் எதிர்கொள்கின்றனர் எனவும் கூறினார்
Comments are closed.