டிசம்பர் 15 : நற்செய்தி வாசகம்

நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 19-23
அக்காலத்தில்
யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து, “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார். அவர்கள் அவரிடம் வந்து, “ ‘வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?’ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்று சொன்னார்கள்.
அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக, “நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————–
ஆண்டவரைத் தயக்கமின்றி நம்புவோம்
திருவருகைக்காலம் மூன்றாம் வாரம் புதன்கிழமை
I எசாயா 45: 6b-8, 18, 21b-25
II லூக்கா 7: 19-23
ஆண்டவரைத் தயக்கமின்றி நம்புவோம்
ஆண்டவரை நம்பாத மக்கள்:
ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கைகொண்ட அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். ஒருநாள் ஆண்டவர் இவருடைய கனவில் தோன்றி, ‘நாளைய நாளில் நான் கோயிலுக்கு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அருள்பணியாளர், ‘ஆண்டவர் வாக்கு மாறாதவர்; அதனால் அவர் சொன்னது போன்றே, நாளைய நாளில் கோயிலுக்கு வருவர்’ என்று தூய்மைப் பணியாளர்களை – துப்புரவுப் பணியாளர்களை – அழைத்துக் கோயிலைத் தூய்மைப்படுத்தச் சொன்னார். அவர்கள் கோயிலைத் தூய்மைப்படுத்தி முடித்திருந்தபோது, பொழுது நன்றாக விடிந்திருந்தது. ஆகவே, அந்த நாளில் ஆண்டவர் கோயிலுக்கு வருகின்ற செய்தியை ஒலிபெருக்கியின் மூலம் அருள்பணியாளர் அறிவித்தார்.
அருள்பணியாளர் அறிவித்த இந்த செய்தியை யாரும் நம்பவில்லை. இருந்தாலும் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லாரும் கோயிலுக்குக் கிளம்பி வந்தார்கள். நேரம் கடந்தது. ஆண்டவர் கோயிலுக்கு வராததால், இளைஞர்கள் கோயிலை விட்டு வெளியே கிளம்பினார்கள். நண்பன் பகல் வேளை வந்தது. அப்போதும் ஆண்டவர் கோயிலுக்கு வராததால், ‘இவர் கதைவிடுகின்றார்’ என்று அருள்பணியாளரைக் குறைகூறிக் கொண்டு, பெரியவர்கள் சிலர் கோயிலை விட்டு வெளியேறினார்கள். மாலை வேளை ஆனது. அப்போதும் ஆண்டவர் வராததால், ‘ஆண்டவர் வருவார் என்று காத்துக்கொண்டிருந்தால், வீட்டிலுள்ள வேலைகளை யார் பார்ப்பது?’ என்று சொல்லிக்கொண்டு இல்லத்தரசிகள் வீட்டிற்குக் கிளம்பிப் போனார்கள்.
இப்போது கோயிலில் சிறுவர்களும் ஒருசில பெரியவர்களுமே இருந்தார்கள். அவர்களும் இரவு எட்டு மணியாகியும் ஆண்டவர் வராததால், ‘இனிமேல் ஆண்டவர் வருவதற்கு வாய்ப்பில்லை’ என்று சொல்லிக்கொண்டு, வீட்டிற்குக் கிளம்பிப் போனார்கள். இரவு பத்து மணி, பதினொரு மணி ஆனது. அப்போதும் ஆண்டவர் வராததால், உபதேசியார், கோயில் கதவு சன்னல்களை அடைத்தார்.
அருள்பணியாளருக்கு அப்போதுகூட ஆண்டவர் வருவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவர் உபதேசியாரிடம், “ஆண்டவர் வருவார் என்ற நம்பிக்கை எனக்கிருந்து. அதனால் நாம் இருவரும் கோயிலுக்குள் படுத்துக்கொள்வோம்” என்றார். உபதேசியார் வேறு வழியில்லாமல், அருள்பணியாளரோடு கோயிலுக்குள் படுத்துக்கொண்டார். சரியாக மணி பன்னிரண்டு இருக்கும். அப்போது கோயில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனே அருள்பணியாளர் ஆண்டவர்தான் வந்திருக்கின்றார் என்று கோயில் கதவைத் திறக்க விரைந்தபோது, உபதேசியார் அவரைத் தடுத்து நிறுத்தி, ‘இது ஆண்டவராக இருக்க முடியாது. பேசாமல் படுத்துத் தூங்குங்கள்” என்றார். இதனால் அருள்பணியாளர் ஏமாற்றத்தோடு வந்து படுத்துகொண்டார்.
மறுநாள் காலையில் கோயில் திறக்கப்பட்டது. அப்போது கோயிலுக்கு முன்பு ஒரு சோடி காலடித் தடம் படிந்திருப்பதைக் கண்ட அருள்பணியாளர், “நேற்றிரவு வந்தது ஆண்டவர்தான். அவரை நாம் பார்க்காமல் விட்டுவிட்டோமே’ என்று சொல்லி வருத்தப்பட்டார்.
ஆம், கடவுள் நம்மைத் தேடி வருகின்றார். நாம்தான் அவரை நம்பி ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோம். இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான், இயேசுதான் உண்மையான மெசியா என்று நம்பி ஏற்றுக்கொள்ளாததைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இணைப்பாளரான திருமுழுக்கு யோவான், மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்து, அவர் வந்தபின் தம் சீடர்களுக்கு சுட்டிக்காட்டினார். அப்படிப்பட்டவர் இன்றைய நற்செய்தியில், தன்னுடைய சீடர்களை இயேசுவிடம் அனுப்பி, “வர இருப்பவர் நீர்தாமா, அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்கச் சொல்கிறார்கள்.
திருமுழுக்கு யோவான் கேட்கச் சொல்லும் இக்கேள்விகள், இயேசுவைச் சுட்டிக் காட்டிய திருமுழுக்கு யோவானுக்கு என்ன ஆயிற்று என்று நமக்குக் கேட்கத் தோன்றுகின்றன. திருமுழுக்கு யோவான் இக்கேள்விகளைக் கேட்கச் சொல்லி, தம் சீடர்களை இயேசுவிடம் அனுப்பி வைத்தபோது, சிறையில் இருந்தார். இயேசு உண்மையிலேயே மெசியாவாக இருந்திருந்தால், தன்னை அவர் சிறையிலிருந்து விடுவித்திருப்பார். அவர் அவ்வாறு செய்யாதால், அவர் மெசியாவாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் திருமுழுக்கு யோவான் தன் சீடர்களை இயேசுவிடம் அனுப்பி வைக்கின்றார்.
இதற்கு இயேசு திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம், “நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்” என்று சொல்லிட்டுத் தொடர்ந்து, “என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்கிறார். ஆம், இயேசு வாக்களிக்கப்பட்ட மெசியா. இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல அவரே இறைவன்; அவரையன்றி வேறு யாருமில்லை. ஆகவே, அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வதும், அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதுமே நாம் செய்ய வேண்டிய முதன்மையான செயல்கள். இதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 ஆண்டவரை நம்பினோர் ஏமாற்றம் அடைவதில்லை.
 ஆண்டவருக்கு நிகருக்கு யாருமில்லை.
 நம்பிக்கை வாழ்வில் தடைகளும் போராட்டங்களும் வரத்தான் செய்யும். அதற்காக நாம் நம்பிக்கை இழந்து விடக்கூடாது.
இறைவாக்கு:
‘இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்’ (மத் 10:22) என்பார் இயேசு. எனவே, நாம் நமது நம்பிக்கை வாழ்வில் தடைகள் வந்திடினும், இறுதிவரை ஆண்டவரில் நிலைத்திருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.