டிசம்பர் 14 : நற்செய்தி வாசகம்

யோவான் வந்தார்; பாவிகள் அவரை நம்பினார்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32.
அக்காலத்தில்
இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: “இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர்.
இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
“கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது”
திருவருகைக்காலம் மூன்றாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I செப்பனியா 3: 1-2, 9-13
II மத்தேயு 21: 28-32
“கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது”
கீழ்ப்படிவோருக்குப் பரிசு:
தந்தை ஒருவர் தன் ஐந்து மகன்களையும் அழைத்து, அவர்களை வட்டமாக அமர வைத்து, அவர்கள் நடுவில் ஒரு பொம்மையை வைத்தார். பின்னர் அவர் அவர்களிடம், “இந்தப் பொம்மையை என் பெற்றோர், அதாவது உங்களுடைய தாத்தா பாட்டி, நான் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததற்காகக் கொடுத்த பரிசு. இப்பொழுது நான் இந்தப் பரிசை உங்களுள் ஒருவருக்கு கொடுக்கப்போகிறேன். ஆம், யார் அம்மாவிற்கு மிகவும் கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவருக்குத்தான் இந்தப் பரிசு” என்றார்.
சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. பிறகு அந்த மகன்களில் கடைசி மகன் எழுந்து, நடுவில் இருந்த பரிசை எடுத்து, அதைத் தந்தையிடம் கொடுத்து, “அப்பா! எங்கள் எல்லாரையும் விட நீங்கள்தான் அம்மாவிற்கு மிகவும் கீழ்ப்படிந்து நடக்கிறீர்கள். அதனால் உங்களுக்குத்தான் இந்தப் பரிசு சேரவேண்டும்” என்றான். இதற்குத் தந்தையால் எதுவும் பேச முடியவில்லை!
வேடிக்கையான கதையாக இருந்தாலும், இன்றுள்ள பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில்லை என்கிற உண்மையை நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் கூறுகின்றது. இன்றைய இறைவார்த்தை நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற செய்தியை எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
திருவிவிலியத்தில் இடம்பெறும் ‘செவிசாய்த்தல்’ என்ற வார்த்தைக்கு, ஒருவர் சொல்வதைக் கேட்டல் என்பது மட்டும் பொருளில்லை. கேட்டதன் படி நடத்தல். அதுவே செவிசாய்த்தால் என்ற வார்த்தையின் உண்மையான பொருளாகும்.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ஆண்டவருக்குச் செவிசாய்க்காமலும், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும் வாழ்ந்த எருசலேம் நகர மக்களுக்கு எதிரான ஆண்டவரின் கண்டனக் குரலைப் பதிவு செய்கிறது. ஆண்டவராகிய கடவுள், எருசலேம் வாழ் மக்களுக்கு மிக நெருக்கமாக இருந்தார் (இச 4:7). அப்படியிருந்தும் அவர்கள் ஆண்டவரின் குரலைக் கேளாமலும், அவருக்குச் செவிசாய்க்காமலும் போனதால்தான் ஆண்டவர் அவர்களைக் கண்டிக்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு, தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும் இன்னும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிகொடாமல் இருந்ததையும், வரிதண்டுபவர்களும் பாவிகளும் ஆண்டவருக்குச் செவி கொடுத்து வாழ்ந்ததையும் குறிக்கும் வகையில் இரு புதல்வர்கள் உவமையைக் கூறுகின்றார். ஆம், ஆண்டவரின் வார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல், அதைக் கடைப்பிடித்து வாழவேண்டும். அந்த அடிப்படையில் தலைமைக் குருக்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாமல் இருந்தார்கள். பாவிகளும் வரிதண்டுபவர்களும் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்து, அதன்படி வாழ்ந்து, விண்ணகத்தை உரிமைப் பேறாகப் பெற்றார்கள்.
நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்கின்றவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 சொல்வது எளிது, செய்வது கடினம்.
 ஆண்டவரின் வார்த்தையைக் கேளாமல், அவர்மீது நம்பிக்கை ஏற்பட வாய்ப்பில்லை.
 வாழ்வு தரும் கடவுளின் வார்த்தைக்குச் செவிகொடாதவர், தம் வாழ்வினையே இழக்கின்றார்.
இறைவாக்கு:
‘கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது’ (1 சாமு 15:22) என்பார் சாமுவேல். எனவே, நாம் ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிசாய்த்து, அதன்மூலம் அவருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.