போலியான வர்த்தக கிறிஸ்மசை அனுபவிக்காதிருப்போம்
வத்திக்கானின் புனித பேதுரு வளாகம், மற்றும், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியவர்களின் பிரதிநிதிகள் குழுவை, டிசம்பர் 10, இவ்வெள்ளியன்று திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, அவற்றை வழங்கிய நாட்டினருக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இக்கிறிஸ்மஸ் குடிலில் வைக்கப்பட்டுள்ள உருவங்கள், பொருள்கள், துணிகள் போன்றவை, தென் அமெரிக்க நாடான பெருவின் ஆண்டெஸ் மலைப்பகுதி மக்களையும், அனைத்து கலாச்சாரத்தினர் மற்றும் நாட்டினர் அனைவரும் மீட்புப்பெறுவதற்கு, காணக்கூடிய முறையில் இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்பதையும் குறித்துக் காட்டுகின்றன என்று திருத்தந்தை கூறினார்.
இக்குடில், பெரு நாட்டின் Huancavelica நகர்ப் பகுதியின் Chopoca கிராமத்திலிருந்து அமைக்கப்பட்டுள்ளது எனவும் உரைத்த திருத்தந்தை, இக்குடிலுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரம், இத்தாலியின் Trentino மாநிலத்திலுள்ள Andalo காடுகளிலிருந்து எடுத்துவரப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
கிறிஸ்மஸ் மரம்
கிறிஸ்மஸ் மரம், வாழ்வின் மரமாகிய (காண்க.தி.வெ.2:7), கிறிஸ்துவின் அடையாளமாக உள்ளது எனவும், மனிதர் பாவத்தினால் இந்த வாழ்வின் மரத்தை அடைய முடியாமல் இருந்தார் (காண்க. தொ.நூ.2:9) எனவும், ஆயினும், கிறிஸ்மஸோடு இறைவாழ்வு மனித வாழ்வில் இணைந்தது எனவும் திருத்தந்தை கூறினார்.
இது, மனிதரோடு தம்மை என்றென்றும் ஒன்றிணைக்கும் கடவுளின் கொடையாகிய மறுபிறப்பை உண்டாக்குகிறது என்றும், உலகின் இரவுகளிலும் தொடர்ந்து சுடர்விடும் இயேசுவின் அன்பின் ஒளியை, அம்மரத்திலுள்ள விளக்குகள் குறிக்கின்றன என்றும் திருத்தந்தை கூறினார். இத்தகைய சிறப்புமிக்க கிறிஸ்மசை, நுகர்வு மற்றும், புறக்கணிப்பால் மாசுபடுத்தாதிருப்போம் என்றும், போலித்தனமான வர்த்தக கிறிஸ்மசை அனுபவிக்காதிருப்போம் என்றும் உரைத்த திருத்தந்தை, கிறிஸ்மஸ் குடிலும், மரமும் நம் இதயங்களை, மனுஉருஎடுத்த இயேசுவின் அமைதி மற்றும் மகிழ்ச்சியால் நிச்சயமாக நிரப்பும் என்றும் கூறினார்.
நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பெருவிழாவாகிய கிறிஸ்மசை பிரதிபலிக்கும் குடிலையும் மரத்தையும் வழங்கிய மற்றும், அவற்றை அழகுபடுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதே, நம் நம்பிக்கைக்குக் காரணம் என்றுரைத்து, மீண்டும் அவர்களுக்கு நன்றிகூறி, தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.
Comments are closed.