வீட்டின் சுவர்களுக்குள் வரலாறு மாறியது
டிசம்பர் 8ம் தேதி, திருஅவையில் அமல அன்னை பெருவிழா. இத்தாலி நாடு முழுவதற்கும் இந்நாள் விடுமுறை நாளாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன் மறைக்கல்வி உரை, இப்பெருவிழாவையொட்டி, இடம்பெறவில்லை. ஆனால், பெருவிழா நாட்களில் அவர் வழங்கும் நண்பகல் மூவேளை செபஉரையை, இந்நாளிலும், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகம், இறைத்தூதரின் அறிவிப்பை (லூக் 1:26-38) அன்னை மரியா அவர்கள் பெற்ற நாசரேத்தூர் இல்லத்திற்கு, நம்மையும் அழைத்துச் செல்கிறது. வேறு இடங்களைக் காட்டிலும், தன் சொந்த வீட்டின் சுவர்களுக்குள்தான் ஒருவரால் தன்னை அதிகம் அதிகமாக வெளிப்படுத்த முடியும். அதைத்தான் இங்கும் காண்கிறோம். அன்னை மரியாவின் இதயத்தின் அழகு இங்கு வெளிப்படுத்தப்படுகின்றது. ‘அருள் நிறைந்தவர்’ என்று இறைத்தூதர் அன்னை மரியாவை அழைக்கிறார். அருள் நிறைந்தவர் என்றால், அவர் தீயனவற்றை, தன்னில் கொண்டிராதவர், பாவமற்றவர், தூய்மையானவர் என அர்த்தம். இறைத்தூதரின் வார்த்தைகளைக் கேட்டதும் அன்னமரியா கலங்கிநிற்பதைக் காண்கிறோம். அவர் திகைப்புற்றது மட்டுமல்ல, கலக்கமும் அடைகிறார். இறைத்தூதரின் வார்த்தைகள் அன்னை மரியாவுக்கு மிகப்பெரிதாகத் தெரிகின்றன. தன் தாழ்நிலையை உணர்ந்து அவர் செயல்பட்டது, இறைவனைக் கவர்கின்றது. தன்னைப்பற்றி மிகப்பெரியதாக எண்ணியிராத அன்னை மரியா, மிகப்பெரும் வாழ்த்தைக் கேட்டதும், அவரின் இதய அழகு வெளிப்படுவதைப் பார்க்கிறோம். அவர் தன்னைப்பற்றி எண்ணவில்லை, மாறாக, எப்போதும் இறைவனைக் குறித்தும், தனக்கு அடுத்திருப்பவர் குறித்தும் அக்கறையுடன் இருக்கிறார். அருள் நிறைந்தவர், என இறைத்தூதர் அன்னை மரியாவை வாழ்த்தியது, நாசரேத் சதுக்கத்தில் இடம்பெறவில்லை, மாறாக, நான்கு சுவர்களுக்குள் மறைவாக இடம்பெற்றது, அதுவும் அன்னை மரியாவின் தாழ்ச்சியுடன் இடம்பெற்றது. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இது நமக்கு, மிக உன்னத செய்தி. மிகச்சிறிய வீட்டின் எளியச் சுவர்களுக்குள் இறைவன், வரலாற்றையே மாற்றியமைக்கிறார். நாமும் தாழ்ச்சியுடன் இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் நம்மை திறந்தாலே போதும், அரும்பெரும் செயல்கள் ஆற்றமுடியும் என இறைவன் காட்டுகிறார். இன்றும், நம் தினசரி வாழ்வில், அனைத்துச் சூழல்களிலும் அரும்பெரும் செயல்கள் ஆற்றவேண்டும் என இறைவன் எதிர்பார்க்கிறார். நம் தினசரி வாழ்வு நடவடிக்கைகளில் இறைவன் பெரியன ஆற்ற ஆவல் கொள்கிறார்.
நமக்கு அருளை வழங்குமாறு அன்னை மரியாவிடம் கேட்போம். நற்செய்தி வேறு, வாழ்வு வேறு என்ற தவறான எண்ணத்திலிருந்து விடுதலைப் பெறவும், திருவுருவப்படங்களையும், புனித அட்டைகளையும் சார்ந்தது அல்ல புனிதத்துவம், மாறாக, தாழ்ச்சியிலும், மகிழ்விலும் தினசரி வாழ்வை வாழ்வதில் நாம் தூண்டப்படுவதை அது சார்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவும், கடவுளுக்கும் நமக்கு அடுத்திருப்பவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து நம்மிலிருந்து நாம் விடுதலை பெறவும், அன்னை மரியாவின் அருளுதவியை நாடுவோமாக.
மனம் தளராதிருப்போம். நம்முள் புனிதத்துவத்தை கட்டியெழுப்ப தேவையானவற்றை இறைவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ளார். அன்னை மரியாவின் இரக்கம் நிறைந்த கண்கள் நம்மை நோக்கித் திருப்பப்பட அவரை அனுமதிப்போம். தன்னை நாடி வந்தவர்களை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை.
இவ்வாறு, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
Comments are closed.