#வாசக மறையுரை (டிசம்பர் 09)

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்
வியாழக்கிழமை
I எசாயா 41: 13-20
II மத்தேயு 11: 11-15
“நான் அவர்களைக் கைவிட மாட்டேன்”
தீ விபத்தில் தப்பித்த கோழிக்குஞ்சுகள்:
ஊருக்கு வெளியே தனக்குச் சொந்தமான இடத்தில் பெரியவர் ஒருவர் பண்ணை வைத்திருந்தார். அதில் அவர் ஆடு மாடுகளையும், கோழிகளையும் வளர்த்து வந்தார். பகல் முழுவதும் பண்ணையிலேயே இருக்கும் அவர், இரவு நேரத்தில் கதவை நன்றாக அடைத்துவிட்டு, வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவார்.
ஒருநாள் காலையில் அவர் பண்ணைக்குச் சென்றிருந்தபோது, அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், அவரது பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த ஒருசில ஆடு மாடுகளும், கோழிகளும் கருகி, இறந்துபோயிருந்தன. உள்ளத்தில் பேரிடி இறங்கியவராய், எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்தார் அவர்.
ஓரிடத்தில் கோழி ஒன்று வித்தியாசமாக இறந்து கிடப்பதைக் கண்டு, அவர் தன்னிடத்தில் இருந்த குச்சியைக் கொண்டு, அதைப் புரட்டிப் போட்டார். அப்பொழுது அந்தக் கோழியின் இறக்கைகளுக்குள் அதனுடைய மூன்று குஞ்சுகள் உயிரோடு இருப்பதைக் கண்டு அவர் மிகவும் வியந்துபோனார். ‘தீ விபத்து ஏற்பட்டதும், தன்னுடைய மூன்று குஞ்சுகளையும் காப்பதற்குத்தான் இந்தக் கோழி இப்படியொரு செயலைச் செய்திருக்கின்றது’ என்று அதன் அன்பை எண்ணி அவர் உருகி நின்றார்.
பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்ததும், தன்னைக் காத்துக் கொள்ளாமல், தன் மூன்று குஞ்சுகளையும் தன் இறக்கைகளுக்குள் வைத்துக் காத்து, அவற்றைக் கைவிடாமல் இருந்த அந்தக் கோழியின் அன்பு உண்மையில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், “நான் அவர்களைக் கைவிட மாட்டேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கடவுளுடைய கட்டளையைக் கடைப்பிடியாமல், வேற்று தெய்வங்களை வழிபட்டதால் வடநாட்டினர் அசீரியர்களாலும், தென் நாட்டினர் பாபிலோனியர்களாலும் அடைந்த துயருக்கு அளவே இல்லை. இதனால் அவர்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்று நம்பிக்கை இழந்து நின்றார்கள். இத்தகைய வேளையில் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக அவர்களுக்கு நம்பிக்கைச் செய்தியை அளிக்கின்றார்.
மலைகள், குன்றுகள் யாவும் இஸ்ரயேல் மக்களை அடக்கி ஆண்ட அவர்களுடைய எதிரிகளைக் குறிக்கும் சொற்கள். அவர்களையெல்லாம் ஆண்டவர் தவிடு பொடியாக்குவேன் என்கிறார். மேலும் நாடுகடத்தப்பட்ட மக்கள் தண்ணீருக்காக ஏங்கித் தவித்தார்கள். இதற்கு மாற்றாக ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்குப் பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன் என்று என்கிறார். இவ்வாறு கடவுள் அவர்களிடம், நான் உனக்குத் துணையாய் இருப்பேன்; நான் உங்களைக் கைவிட மாட்டேன் என்று நம்பிக்கை வாக்குறுதியை அளிக்கின்றார்.
ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த வாக்களித்த இந்த வாக்குறுதிகள் பொய்யில்லை. அவையெல்லாம் இயேசுவின் வழியாக நிறைவேறின. ஆதலால், வாக்கு மாறாத ஆண்டவரை நாம் சிக்கெனப் பற்றிக்கொண்டு, அவரில் உறுதியாய் இருப்போம்.
சிந்தனைக்கு:
 வாக்குப் பிறழாமை என்ற பண்பு ஒரு மனிதர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டும்.
 நம்மைக் கைவிடாத ஆண்டவரில் நிலைத்திருப்பதே நம்முடைய வாழ்விற்கு வளமும் நலமும் சேர்க்கும்.
 நம்மை நம்பியிருக்கும் ஏழைகளையும் வறியவர்களையும் நாம் கைவிடாதிருப்போம்.
இறைவாக்கு:
‘கடவுளே, நீர் என்னை நினைவுகூர்ந்தீர். உம்மேல் அன்புகூர்பவர்களை நீர் கைவிடுவதில்லை’ (தானி இ 3:38) என்பார் தானியேல். எனவே, நம்மை என்றும் கைவிடாத ஆண்டவரை இறுகப் பற்றிக்கொண்டு, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.