டிசம்பர் 08 புனித கன்னி மரியாவின் அமல உற்பவம்
மனத்திற்குள் அழுக்கை வைத்துச் சுமக்கும் மனிதர்கள்:
மகாகவி பாரதியின் காலத்தில் குள்ளசாமி என்றொரு சித்தர் வாழ்ந்துவந்தார். பாரதிக்கு அவர்மேல் எப்போதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. காரணம், அவர் மக்கள் செய்யக்கூடிய தவற்றை நேருக்கு நேர் சுட்டிக்காட்டுவார்.
ஒருநாள் குள்ளசாமி என்ற அந்தச் சித்தர் குப்பைகள் நிறைந்த ஒரு பொதிமூட்டையை முகுகில் சுமந்துகொண்டு வந்தார். அவரைப் பார்த்த பாரதிக்கு ஒரே வியப்பாய் இருந்தது. ‘நாம் வெகுவாக மதிக்கக்கூடிய ஒரு மனிதர் இப்படிப் பிச்சைக்காரரைப் போன்று குப்பைகளைச் சுமந்துகொண்டு வருகிறாரே!’ என்று பாரதி அவரை ஒருவிதமாகப் பார்த்தார்.
பின் பாரதி சித்தரிடம், “எதற்காக இப்படிக் குப்பைகளைச் சுமந்துகொண்டு அலைகிறீர்கள்?” என்றார். அதற்கு அவர், “நானாவது வெளியேதான் குப்பைகளை சுமந்துகொண்டு அலைகிறேன்; ஆனால், பலர் உள்ளுக்குள் குப்பைகளைச் சுமந்துகொண்டு அலைகிறார்கள்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக மறைந்தார்.
இதைப் பாரதி, “புறத்தே நான் சுமக்கிறேன்; அகத்தினுள்ளே இன்னொதொரு பழங்குப்பையை சுமக்கிறாய் நீ” என்று தன்னுடைய கவிதையில் எழுதினார்.
சித்தர் பாரதியைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் நமக்கு பொருந்தும். வெளிப்புறத்தில் ஆடம்பரமாக, அழகாகக் காட்சியளிக்கும் பலர், உட்புறத்தில் பாவத்தைச் சுமந்துகொண்டு அலைகிறார்கள். இத்தகைய பின்னணியில் இன்று நாம், கருவிலே பாவக் கறையில்லாது பிறந்த புனித கன்னி மரியாவின் அமல உற்பவ விழாவைக் கொண்டாடுகின்றோம்.
இவ்விழா நமக்கு உண்ர்த்தும் செய்தி என்று சிந்திப்போம்.
வரலாற்றுப் பிண்ணனி:
இன்று திருஅவையானது புனித கன்னி மரியாவின் அமல உற்பவ விழாவைக் கொண்டாடுகிறது. மரியா கருவிலேயே பாவக்கறையில்லாமல் உதிர்த்தார் என்பதே இவ்விழாவின் கருப்பொருளாக இருக்கிறது.
இவ்விழா கீழைத் திருஅவையில் 7 ஆம் நூற்றாண்டிலிருந்தும், மேலைத் திருஅவையில் 9ஆம் நூற்றாண்டிலிருந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த காண்டர்பரி ஈம்டர் என்பவர் ‘அமல உற்பவம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். இப்புத்தகத்தில் அவர் ‘மரியா கருவில் உதிக்கும்போதே பாவக்கறையில்லாது உதித்தார்’ என்று எழுதி இருந்தார். இதை எதிர்த்து இறையியலாளர்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகின்ற அக்குவினோ நகர்ப் புனித தாமஸ், “மரியா பாவக்கறையில்லாமல் உதித்தார் எனில், கடவுளது மீட்பின் பயன் மரியாவிடத்தில் செயல்படாது போய்விடுமே!’ என்று விவாதம் செய்தார்; ஆனால் அவருக்குப் பின் வந்த ஜான் டன்ஸ் ஸ்காட்டுஸ் என்பவர், “கடவுளது மீட்பின் பலன் மரியாவுக்குதான் மிகுதியாகத் தேவைப்படுகிறது” என்று இந்த விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பின்னர் இக்கோட்பாடு படிப்படியாக வளர்ந்து வந்தது.
1854 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8 ஆம் நாள் அப்போது திருத்தந்தையாக இருந்த ஒன்பதாம் பயஸ், இறை உந்துதலின் பேரில் ‘மரியா கருவிலே பாவக்கறையில்லாமல் உதித்தார் என்று ‘அமல உற்பவியான மரியா’ என்ற கோட்பாட்டைப் பிரகடம் செய்தார். இதற்கு முத்தாய்ப்பாய், 1858 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25 ஆம் நாள் லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்குக் காட்சி தந்த மரியா ‘நாமே அமல உற்பவம்’ என்று இக்கோட்பாட்டை உறுதி செய்தார். இவ்வாறு திருச்சபையில் ‘புனித கன்னி மரியா அமல உற்பவி’ என்ற விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவிவிலியச் சான்றுகள்:
இவ்வேளையில் மரியா அமல உற்பவி என்று சொல்வதற்கு திருவிவிலியச் சான்றுகள் இருக்கின்றதா? என்று ஆராய்ந்து பார்ப்போம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் முதன்மை வானதூதர் கபிரியேல் மரியாவை வாழ்த்தும்போது, “அருள் நிறைந்தவரே வாழ்க!” என்று தான் வாழ்த்துகிறார் (லூக் 1:29). மரியா கடவுளின் அருளை நிரம்பப் பெற்றுக்கிறார் என்பதே இதன் பொருள். மேலும் மூவொரு கடவுளில் இரண்டாம் ஆளாக இருக்கும் மகனாகிய இயேசு, ‘பாவம் செய்யாதவர்’ (எபி 4:15), ஆதலால் பாவமில்லாத ஆண்டவர் இயேசு மனிதனாகப் பிறக்கவேண்டும் எனில், பாவமே அறியாத ஒரு பெண்ணின் வயிற்றில்தான் மகனாகப் பிறக்கவேண்டும். அதனால்தான் கடவுள் மரியாவைப் பாவக்கறை சிறிதும் இல்லாமல் தோன்றச் செய்தார்.
அதனால் “அமல உற்பவம்” என்பது புனித கன்னி மரியா பெற்ற மிகப்பெரிய பேறு என்று சொல்வதைவிடவும், தன் மகன் இயேசுவின் பொருட்டு கடவுள் மரியாவுக்குக் கொடுத்த பேறு என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.
தூயோராய் வாழ அழைப்பு:
இன்றைய முதல்வாசகத்தில் முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாவும் தங்களுடைய கீழ்ப்படியாமையால் கடவுளால் உண்ணக்கூடாது என்று பணிக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டனர். அதனால் பாவத்தை வருவித்துக் கொண்டனர்; ஆனால் மரியாவோ தன்னுடைய பாவக்கறையற்ற வாழ்வால், கீழ்ப்படிலால் தன்னுடைய மகன் இயேசுவின் வழியாக பாவத்தை வெற்றிகொள்கிறார்; பாவத்திற்கு காரணமாக இருந்த சாத்தானை தன்னுடைய காலால் நசுக்குகிறார். நாமும்கூட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்பது போல ‘தூயோராக, மாசற்றவராக’ நடக்கும்போது பாவத்தை வெற்றி கொள்ளலாம் என்பதே இங்கு உணர்த்தப்படும் செய்தியாக இருக்கிறது.
மரியா தனது மாசற்ற வாழ்வால் பாவத்தை வெற்றிகொண்டார். நாமும் மாசற்ற வாழ்வு வாழ்ந்தோம் என்றால் நம்மாலும் பாவத்தை வெற்றிக்கொள்ள முடியும் என்பதை ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்; ஆனால் இன்றைக்கு நம்மால் தூய, மாசற்ற வாழ்க்கை வாழமுடிகிறதா? என்று நினைத்துப் பார்க்கும்போது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. நமது சிந்தனையால், சொல்லால், செயலால் அன்றாடம் எத்தனையோ பாவங்களைச் செய்கிறோம்; கடவுளை விட்டுப் பிரிந்து வெகுதொலைவில் இருக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். திருப்பாடல் 51:10 இல் வாசிப்பதுபோல் “இறைவா தூயதோர் உள்ளத்தை என்னுள் படைத்தருளும்” என்று இறைவனைப் பார்த்து வேண்டிக்கொண்டு, தூயராய் நடப்போம்.
புனித கன்னி மரியாவின் மீது பற்று:
புனித கன்னி மரியாவின் அமல உற்பவப் விழாக் கொண்டாடும் நாம் மரியாவின்மீது ஆழமான பற்றுக்கொண்டு வாழே வேண்டும். “மரியாவின் பிள்ளை, அவலமாய்ச் சாவதில்லை” என்பர். நாம் மரியாவின் மீது ஆழமான பற்றுக்கெண்டு வாழ்ந்தோமெனில், துன்பங்கள் நம்மை நெருங்காது.
கோடி அற்புதர் புனித அந்தோனியார் தனது வாழ்வில் பல்வேறு சோதனைகளையும், இன்னல்களையும் சந்தித்தார். அப்படிப்பட்ட நேரங்களில் அவர் புனித கன்னி மரியாவை நோக்கி இவ்வாறு மன்றாடுவார்: “என் அரசியே! என் தாயே! என்மேல் கவனமாய் இரும்” (My Queen, My Mother, Watch over me). இதனால் அந்தோனியார் இறப்பதற்கு ஒருசில நாள்களுக்கு முன்பாக புனித கன்னி மரியா அவருக்கு கட்சி தந்து, “உன் நேர்மைக்கும் என்மீது நீ கொண்டிக்கும் அன்பிற்கும் விண்ணகத்தில் உனக்கொரு இடம் காத்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
புனித மரியாவின்மீது ஆழமான பற்றுக்கொண்டு வாழும்போது, கடவுள் புனித கன்னி மரியா வழியாக நமக்கு எல்லா ஆசியையும் தருவார் என்பதை இந்நிகழ்வானது நமக்கு மிக அழகாக எத்துரைக்கிறது.
எனவே புனித கன்னி மரியா அமல உற்பவி என்ற விழாவைக் கொண்டாடும் நாம், மரியாவைப் போன்று நாமும் மாசற்றவராக வாழ்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.