விழிப்புடன் செயல்பட’ இயேசு விடுக்கும் அழைப்பு
நம் ஒவ்வொருவரின் இதயத்தையும் உறக்கத்திலிருந்து தட்டியெழுப்பி, வாழ்வில் முக்கியமானதைக் கண்டுகொள்ளவும், எப்போதும் விழிப்புடன் இருக்கவும், இறைவேண்டலில் நிலைத்திருக்கவும், இத்திருவருகைக்காலம் நமக்கு உதவுவதாக என, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறாகிய நவம்பர் 28ம் தேதி, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கால முடிவில் நமதாண்டவர் வரவிருப்பது குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
நம் மீட்புக்காக வரவிருக்கும் இறைவனை, நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் எதிர்பார்த்து காத்திருப்போம் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தினசரி வாழ்வின் சவால்களும், துயர்களும், நம்மை மூழ்கடித்துவிடாமல் இருக்க, விழிப்பாயிருந்து செபிப்போம் எனவும் அழைப்புவிடுத்தார்.
நமக்கு சுகமானவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, மற்றவைகளை அலட்சியப்படுத்தி செயல்படும் நிலைகள் குறித்த எச்சரிக்கையை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விழிப்புடன் செயல்படுவது என்பது, கிறிஸ்தவ வாழ்வின் முக்கியக் கூறு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
நம் தினசரி வாழ்வு நடவடிக்கைகள், வெறும் சக்கரச் சுழற்சி போல் இடம்பெறுவதைத் தடுப்பதையும், உலகம் சார்ந்த போக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்ப்பதையும், ‘விழிப்புடன் செயல்பட’ இயேசு விடுக்கும் அழைப்பு எதிர்பார்க்கிறது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள், தங்கள் தோள்களில் சுமந்து செல்லும் சுமைகள் குறித்து நாம் கவனம் செலுத்தி, அவைகளை அகற்றும் வழிகள் குறித்து ஆராய்கிறோமா என்ற கேள்வியையும் தன் மூவேளை செபவுரையின்போது முன்வைத்த திருத்தந்தை, அக்கறையற்றிருப்பது, தூக்கம் போன்ற நிலைகளிலிருந்து நம்மைத் தட்டியெழுப்பி, விழிப்புடன் செயல்பட வைப்பது இறைவேண்டலே என்பதையும் சுட்டிக்காட்டினார்.
நம் இதயத்தில் தீபத்தை ஏற்றிவைக்கும் இறைவேண்டல், நம்மை இறைவனிடம் மீண்டும் கொண்டுவரவும், வாழ்வின் முக்கியக் கூறு குறித்து அறிந்துகொள்ளவும் உதவுகிறது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘ஆண்டவராம் இயேசுவே வாரும்’ என்ற சிறிய இறைவேண்டலை, மீண்டும், மீண்டும், நமக்குள் எடுத்துரைப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.
Comments are closed.