அமைதியாக போய் வாருங்கள் குழந்தைகளே. மீண்டும் இந்த நாட்டில் பிறந்திடாதீர்கள்
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஆறு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்
பாதை புரண்ட போது எல்லோரும் கதறியழுதபடி ஒருவரையொருவர் காப்பாற்ற முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.
பாதை மெல்ல மெல்ல புரள்வதை அறிந்தவுடன் தனது மகனை அழுத்தமாக பிடித்துக் கொண்டு ஒரு தந்தை கரைக்கு வேகமாக வந்து சேர்ந்தார். பின்னர், மகனை அங்கேயே இருக்குமாறு கூறி விட்டு மீண்டும் தண்ணீரில் பாய்ந்து மற்றவர்களுடன் சேர்ந்து தண்ணீரில் தத்தளிப்பவர்களை ஒவ்வொருவராக காப்பாற்றினார்.
கடைசியாக தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த எல்லோரும் காப்பாற்றப்பட்ட பின்னர், குறித்த தந்தை மகனின் அருகில் வந்தார். தொடர்ந்தும் கவலையில் அழுத படியே இருந்தார்.
பக்கத்தில் இருந்தவர் “உங்களுடைய மகனை காப்பாற்றி விட்டீங்கதானே. அழாதீர்கள். தைரியமாக இருங்கள்” என்றார்.
“தண்ணீரில எங்கும் தேடி விட்டேன். எனது மனைவியையும் இன்னுமொரு பிள்ளையையும் காணவில்லை” என்றபடி அழுது கொண்டிருந்தார்.
சிலர் தண்ணீரில் மூழ்கியவர்களை தொடர்ந்தும் தேடிக் கொண்டே இருந்தனர்.
சில நிமிடங்களின் பின்னர் அவருடைய மனைவியும் பிள்ளையும் மீட்கப்பட்டனர். அவருடைய மனைவி தனது பெண் பிள்ளையை இறுக்க கட்டியபடியிருந்தார். இருவருடைய உயிரும் நீருக்கு அடியிலேயே பறிக்கப்பட்டிருந்தது.
Comments are closed.