வாசக மறையுரை (நவம்பர் 20)

பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் வாரம்
சனிக்கிழமை
I 1 மக்கபேயர் 6: 1-13
II லூக்கா 20: 27-40
“இதனால்தான் இந்தக் கேடுகள் எனக்கு வந்துற்றன”
நான் மிகப்பெரிய பாவி:
அறுவைச் சிகிச்சையின்போது, சிகிச்சை பெறும் நோயாளர் தன் உணர்வை இழக்க மருத்துவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு மருந்துதான் குளோரோபாம் (Chloroform). இந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் தாம்சன் என்ற அறிவியல் அறிஞர்.
ஒருமுறை ஒரு மாணவர் இவரிடம், “ஐயா! நீங்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பகளில், மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று எதைச் சொல்வீர்கள்?” என்றார். அதற்கு இவர் சிறிதும் தாமதியாமல், “நான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு, நான் மிகப்பெரிய பாவி. இயேசு என்னுடைய மீட்பர் என்பதுதான்” என்று பொறுமையாகப் பதில் சொன்னார்.
ஆம், ஜேம்ஸ் தாம்சன் பெரிய கண்டுபிடிப்பாளராக இருந்தாலும், தான் ஒரு மிகப்பெரிய பாவி என்று உணர்ந்தது நமது கவனத்திற்கு உரியது. இன்றைய முதல் வாசகத்தில் நான்காம் அந்தியோக்கு எப்பிபான் மன்னன் தான் ஒரு மிகப்பெரிய பாவி, அதனால்தான் தனக்கு இந்தக் கேடுகளெல்லாம் வந்துற்றன என்பதை உணர்கின்றான். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
அந்தியோக்கு எப்பிபான் மன்னன் முன்பு எருசலேம் திருக்கோயிலில் பாகால் தெய்வத்தின் சிலையை நிறுவி, எருசலேம் திருக்கோயிலைத் தீட்டுப்படுத்தினான். தவிர, அவன் அங்கிருந்த விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் கவர்ந்து வந்திருந்தான். இன்றைய முதல் வாசகத்தில், அவன் எலிமாய் நகரில் பொன், வெள்ளி இருக்கின்றன என்று கேள்விப்பட்டு அதைக் கவர்ந்திட விரைகின்றான்; ஆனால், அவனுடைய படை அங்கிருந்தவர்களால் முறியடிக்கப்படுகின்றது. இதற்கு நடுவில் யூதா நாட்டை எதிர்த்துச் சென்றிருந்த அவனுடைய படை முறியடிக்கப்படுகின்றது. இதையெல்லாம் நினைத்து அவன் கலங்கி, படுத்த படுக்கையாகிவிடுகின்றான்.
அப்பொழுதுதான் அவன் தன்னுடைய தவற்றை உணர்ந்து பார்க்கிறான். எருசலேமில் உள்ள ஆண்டவரின் திருக்கோயிலைத் தீட்டுப்படுத்தியதாலேயே தனக்கு இந்தக் கேடுகள் வந்துற்றன என்று நினைத்து அவன் வருந்துகின்றான். ஆம், எருசலேம் திருகோயிலில், இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதுபோல வாழ்வோரின் கடவுள் குடிகொண்டிருந்தார். அப்படிப்பட்ட திருக்கோயிலை அந்தியோக்கு எப்பிபான் மன்னன் தீட்டுப்படுத்தியதாலேயே அவனுக்கு மிகப்பெரிய அழிவு வந்தது.
ஆதலால், நாம் ஆண்டவர் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு உரிய மரியாதை கொடுத்து, நாமும் உயிருள்ள கோயிலாக வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனைக்கு:
 மனிதர் எதை விதைக்கிறாரோ, அதையே அறுவடை செய்கின்றார்
.
 படைக்கப்பட்ட பொருள்களில் அல்ல, படைத்தவரில் பற்றுக்கொண்டு வாழ்வோம்.
 தீமையை விலக்கிவிட்டு, நன்மை செய்யக் கற்றுக்கொள்வோம்.
இறைவாக்கு:
‘நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் ஆண்டவர் உங்களோடு இருப்பார்’ (ஆமோ 5:14) என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். ஆகையால், நாம் தீமையை விட்டுவிட்டு, நன்மையைத் தேடி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.