புனித யோசேப்பு நம் காலத்திற்கு முன்மாதிரிகை

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, திருத்தந்தை அருளாளர் 9ம் பயஸ் அவர்கள், புனித யோசேப்புவை உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார். இந்த நிகழ்வின் 150ம் ஆண்டின் நிறைவாக, புனித யோசேப்புவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு ஆண்டில் (டிச.8,2020 – டிச.8,2021) நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். Patris corde, அதாவது, ஒரு தந்தையின் இதயத்தோடு என்று பொருள்படும் திருத்தூது மடலில், அப்புனிதர்பற்றிய சில சிந்தனைகளை வழங்கியுள்ளேன். இதற்குமுன் இடம்பெறாத அளவுக்கு, உலகளாவிய நெருக்கடிகளால் நிறைந்துள்ள இக்காலத்தில், இப்புனிதர் தன் ஆதரவையும், ஆறுதலையும், வழிகாட்டுதலையும் நமக்கு வழங்கமுடியும். எனவேதான், தொடர்ந்து வருகின்ற புதன் மறைக்கல்வியுரைகளை, அப்புனிதருக்கு அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தேன். அப்புனிதரின் முன்மாதிரியான வாழ்வு மற்றும், சான்றால், நாம் ஒளியூட்டப்பட, இம்மறைக்கல்வியுரைகள் உதவும் என்று நம்புகிறேன். விவிலியத்தில், யோசேப்பு என்ற பெயர்கொண்டவர்கள், பத்து பேருக்குமேல் உள்ளனர். இவர்களில் மிக முக்கியமானவர் யாக்கோபு-இராக்கேல் தம்பதியரின் மகன் யோசேப்பு. இவர், ஓர் அடிமையாக இருந்ததிலிருந்து பல்வேறு இடர்களை எதிர்கொண்டு இறுதியில், எகிப்தில் பாரவோன் மன்னருக்கு அடுத்தநிலையில் மிக முக்கியமானவராக மாறினார் (காண்க. தொ.நூ.37-50).

புதன் மறைக்கல்வியுரை 171121
புதன் மறைக்கல்வியுரை 171121

புனித யோசேப்பு ஆண்டில், நாம் துவக்கியுள்ள இந்த புதிய மறைக்கல்வித் தொடரில், நாசரேத்து எனும் ஊரின் தாழ்மையான தச்சுத்தொழிலாளர், குழந்தை இயேசுவின் வளர்ப்புத் தந்தை மற்றும், உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலர்பற்றி சிந்திக்கவிருக்கின்றோம். யோசேப்பு என்றால், எபிரேய மொழியில், வளர்ச்சி மற்றும், புதிய வாழ்வைக் கொணர்வதற்கு, கடவுளின் வல்லமையை இறைஞ்சுபவர் என்று அர்த்தமாகும். உலகில் நாம் ஆற்றுகின்ற வேலையில், கடவுளின் பராமரிப்பில் அமைதியாக நம்பிக்கை வைப்பதற்கு, புனித யோசேப்பு நமக்குக் கற்றுத்தருகிறார். அப்புனிதரின் வாழ்க்கை, பெத்லகேம், நாசரேத்து ஆகிய இரு சிறிய நகரங்களோடு முக்கியமாகத் தொடர்புகொண்டது. ஏழைகள், மற்றும், வாழ்வின் விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு கடவுள் தம் அன்பில் முன்னுரிமை கொடுக்கிறார் என்பதை, இவரின் இந்நகரங்களின் வாழ்க்கை நமக்கு நினைவுபடுத்துகின்றது. தாவீது குலத்தின் வழித்தோன்றலாகிய யோசேப்பின் பராமரிப்பில், தாவீதின் நகரமாகிய பெத்லகேமை, தம் மகன் பிறப்பதற்குரிய இடமாக கடவுள் தேர்ந்தெடுத்தார். நாம் வாழ்கின்ற இவ்வுலகில், விளிம்புநிலையில் வாழ்கின்றவர்கள் துவங்கி, அனைவருக்கும் கிறிஸ்துவின் வருகைபற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்பதை, புனித யோசேப்பு, தன் வாழ்வு மற்றும், முன்மாதிரிகையால் நமக்கு நினைவுறுத்துகின்றார். நம் மத்தியில் வாழ்கின்ற ஏழைகள் மற்றும், மறக்கப்பட்டோர், தங்கள் வாழ்க்கையில், நிச்சயமான வழிகாட்டி மற்றும் பாதுகாவலராக, அப்புனிதரை நோக்கலாம். கடவுளின் கண்களில் எது முக்கியம் என்பதைப் பார்க்கவும், அதைப் போற்றவுமென, பெத்லகேமிலிருந்து புதிய பாதையை நாம் எப்போதும் அமைப்பதற்கு, திருஅவைக்காக மன்றாடுமாறு புனித யோசேப்பிடம் வேண்டுவோம்.

இறைவேண்டல்

  • புனித யோசேப்பே,
  • கடவுளை எப்பொழுதும் நம்பியவரே,
  • அவரது பராமரிப்பால் வழிநடத்தப்பட்டு தங்களது தெரிவுகளைத் தேர்வுசெய்தீர்.
  • நாங்களும் எங்களது சொந்தத் திட்டத்தில் அதிகமாகச் சார்ந்து இருக்காமல்,
  • கடவுளது அன்பின் திட்டத்தைச் சார்ந்து இருக்க உதவியருளும்.
  • விளிம்புநிலையிலிருந்து வந்த நீர், இந்த உலகம் புறக்கணிப்பதை நோக்குவதற்கு எம் மனதை மாற்றும். அதனைத் தெரிவுசெய்ய எமக்கு உதவியருளும்.
  • தனிமையை உணர்வோருக்கு ஆறுதலாகவும்.
  • அமைதியாக வேலைசெய்வோருக்கு ஆதரவாகவும் இருந்தருளும்
  • வாழ்வையும், மனித மாண்பையும் பாதுகாத்தருளும். ஆமென்.

இவ்வாறு, புனித யோசேப்பின் எடுத்துக்காட்டான வாழ்வு மற்றும், சான்றுபற்றிய  தன் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில் அப்புனிதரிடமும் செபித்து, இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார். நவம்பர் 17, இப்புதனன்று திருஅவை சிறப்பித்த ஹங்கேரி நாட்டு புனித எலிசபெத், பிறரன்புக்கும் ஆழமான நம்பிக்கை வாழ்வுக்கும் மிகச்சிறந்த முன்மாதிரிகை. ஏழைகள் மற்றும், தேவையில் இருப்போரிடம் திறந்தமனம் கொண்டிருக்க, இவரது பரிந்துரையை நாடுவோம். மேலும், இந்த நவம்பர் மாதத்தில் இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்கள், இறைவனின் இரக்கத்தைப் பெறுமாறும் செபிப்போம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comments are closed.