நவம்பர் 18 : நற்செய்தி வாசகம்
அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44
அக்காலத்தில்
இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.
ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————–
லூக்கா 19: 41-44
மனம்மாறாத இஸ்ரயேல் மக்களும் கண்ணீர்விட்டு அழுத இயேசுவும்
நிகழ்வு
சிற்றூரில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்றில் நிகில் என்றொரு மாணவன் இருந்தான். அவன் பயங்கரக் குறும்புக்காரனாக இருந்தான். அவனுடைய வகுப்பு ஆசிரியர் அவன் செய்துவந்த குறும்புகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவனைப் பலமுறை பள்ளியின் தலைமையாசிரியரிடம் அனுப்பி வைத்தார். தலைமையாசிரியரும் அவனை எவ்வளவோ கண்டித்துப் பார்த்தார். அப்படியிருந்தும் அவன் தன்னுடைய குறும்புகளைக் குறைக்கவே இல்லை.
ஒருநாள் நிகிலின் வகுப்பு ஆசிரியர் அவன் செய்த குறும்புகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவனை பள்ளியின் தலைமையாசிரியரிடம் அனுப்பி வைத்தார். தனக்கு முன்பாக, ஒன்றுமே செய்யாதவன் போல் இருந்த நிகிலை பார்த்த தலைமையாசிரியர் அவனைத் தன்னருகே அழைத்து, அவனுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, “நிகில்! உன்னைச் சாத்தான் பிடித்திருக்கின்றது என்று நினைக்கின்றேன். அதனால்தான் நீ யாருடைய சொல்பேச்சையும் கேட்காமல், தொடர்ந்து தவறு செய்துகொண்டிருக்கின்றாய்?” என்றார். நிகில் ஒருநொடி தலைமையாசிரியரை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “ஐயா! நீங்கள் சொல்வது சரிதான். என்னைச் சாத்தான்தான் பிடித்திருக்கின்றது” என்றான். தலைமையாசிரியரால் எதுவும் பேச முடியாமல் அமைதியானார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மாணவன் நிகிலைப் போன்று இஸ்ரயேல் மக்கள், கடவுளின் கட்டளையை மீறி தவறுகொண்டே இருந்தார்கள். இவர்கட்கு கடைசியில் என்ன நேர்ந்தது…? இயேசு எருசலேம் நகரைப் பார்த்து அழுததற்கான காரணமென்ன…? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
மக்களை மிகுவும் அன்பு செய்த இயேசு
நற்செய்தியில் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும், அதைப் பார்த்து அழுகின்றார். இயேசு எதற்காக அழுதார் என்று நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது, அவர் மக்கள்மீது மிகுதியான அன்புகொண்டிருந்தார்… அந்த மக்களோ அவருடைய அன்பைப் புறக்கணித்துவிட்டு, மனம்போன போக்கில் வாழ்ந்து, அழிவின் விளிம்பில் இருந்தார்கள்! அதை நினைத்துத்தான் அவர் அழுதார் என்கின்ற உண்மையை நாம் அறிந்துகொள்ளலாம். ஏற்கனவே இயேசு தன்னுடைய நண்பர் இலாசர் இறந்திருந்தபோது, அவருடைய கல்லறைக்கு முன்னம் அழுதார் (யோவா 11:35). இப்பொழுது அவர் மீண்டுமாக அழுகின்றார்.
இறைவாக்கினர் எரேமியாவை நினைவுபடுத்தும் இயேசு
இயேசு எருசலேமைப் பார்த்து அழுதது, நமக்கு இறைவாக்கினர் எரேமியாவை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. எப்படியென்றால், இறைவாக்கினர் எரேமியா எருசலேமிற்கு நேரவிருந்த அழிவினை நினைத்துக் கண்ணீர் வடித்து அழுதார் (எரே 9:1ff) இங்கே இயேசுவும் எருசலேம் நகர்க்கு நேரவிருந்த அழிவினை நினைத்து அழுகின்றார். இறைவாக்கினர் யோனா நினிவே நகர்க்கு நேரவிருந்த அழிவினை கண்ணோக்கினார். ஆனால், அழவில்லை (யோனா 4) இயேசுவும் இறைவாக்கினர் எரேமியாவும்தான் எருசலேமிற்கு நேரவிருந்த அழிவினை நினைத்து அழுதார்கள். இருவர்க்கும் அந்த நகர் மீதும் அங்குள்ள மக்கள்மீதும் எந்தளவுக்கு அன்பு இருந்தால், அழுதிருப்பார்கள் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்!
கீழ்ப்படியாமையால் அழிவினைச் சந்தித்த மக்கள்
இயேசு எருசலேமைப் பார்த்து அழுதார் என்றால், அவர் அதன் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்திருக்கலாம். ‘எத்தனை இறைவாக்கினர்கள், இறையடியார்கள் இந்த நகரில் இருந்த மக்கள் நடுவில் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துச் சொல்லியிருப்பார்கள்…? அப்படியிருந்தும் இவர்கள் மனம்மாறாமல் இருக்கின்றார்களே…? என்று அழுதிருக்கக்கூடும். ‘எருசலேம் திருகோயிலுக்குக் காவலாக இருக்கவேண்டிய தலைமைக் குருக்களும் ஏனையோரும் கள்வர்களாகிவிட்டார்களே!’ என்று நினைத்தும் அவர் அழுதிருக்கக்கூடும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ‘யாருக்கும் கீழ்ப்படியாமல் இவர்கள் இப்படி நடக்கின்றார்களோ… இவர்கட்கு உரோமையர்களிடமிருந்து என்ன மாதிரியான அழிவு வரப்போகிறதோ…?’ என்பதை நினைத்துக்கூட அவர் அழுதிருக்கக்கூடும்.
இயேசு அந்த மக்கட்காக அழுதபோதும் அவர்களை அவர் அமைதிக்கான வழியை நாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோதும் அவர்கள் மனம்மாறாமல் இருந்ததால், கிபி. 70 ஆண்டில் உரோமையர்களால் அழிக்கப்பட்டார்கள். அந்த நிகழ்வில் எருசலம் நகர் சூறையாடப்பட்டது; எருசலேம் திருக்கோயில் தகர்க்கப்பட்டது; ஆறு இலட்சத்தும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டார்கள்; பலர் நாடுகடத்தப்பட்டார்கள். இவை எல்லாவற்றுக்கும் காரணம், அவர்கள் உண்மைக் கடவுளாம் யாவே கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தைகளின் படி நடக்காததாலேயே ஆகும்.
எருசலேம் நகர் அழிவு நமக்குச் சொல்லும் மிக முக்கியமான செய்தி, நாம் கடவுளின் குரலுக்குச் செவிமடுத்து, அவர் வழியில் நடக்கவேண்டும் என்பதுதான். ஆகையால், நாம் கடவுளின் குரலுக்குச் செவிமடுத்து, அதன்படி நடக்க முற்படுவோம்.
சிந்தனை
‘ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?’ (2 சாமு 22: 32) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் உண்மையான இறைவனும் கற்பாறையுமான இறைவனின் வார்த்தைகட்கு கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.