மண்ணுலகில் விண்ணுலகைக் கட்டியெழுப்புவோம்

உலகப் பொருட்களும் உடல் வெளித்தோற்றங்களும் ஒருநாள் மறைந்துபோகும், ஆகவே விசுவாசிகள் அனைவரும் இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 14, இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட உலக வறியோர் நாள் திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றியபின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தைகள் தவிர, அனைத்தும் மறைந்துவிடும் என, இன்றைய நற்செய்தியில் உரைக்கும் இயேசு, மண்ணுலகில் விண்ணுலகைக் கட்டியெழுப்ப அழைப்புவிடுக்கிறார், ஏனெனில், நன்மைகள் எப்போதுமே இழக்கப்படுவதில்லை, அவை என்றும் நிலைத்திருக்கும் என விளக்கினார்.

சூரியன் இருளாகும், சந்திரன் ஒளிகொடாது, விண்மீன்கள் வானிலிருந்து விழும் என்றெல்லாம் இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுவதால், அழிவை முன்னுரைப்பவராக, அவரைக் காணாமல், அனைத்தும் மறைந்துபோனாலும் இறையன்பும் அதன் மீட்புச்செய்தியும் ஒருநாளும் மறையாது என்பதை சுட்டிக்காட்டுவதை அங்கு காணவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

உடனடி, மற்றும் தற்காலிகத் திருப்தியைத் தரும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்காமல், மற்றவர்களுக்கு நன்மைகள் புரிவதன் வழியே, ஒருவரின் வாழ்வு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கட்டியெழுப்புதல், இறைவார்த்தை எனும் பாறையின்மீது பொறுமையுடன் கட்டப்படுவதாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அன்பு என்றும் முடிவுறுவதில்லை, நன்மை புரிபவர்கள் நிலைவாழ்வுக்கு முதலீடுச் செய்கிறார்கள், என்று கூறிய புனித பவுலின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தையில் ஒருவரின் வாழ்வை கட்டியெழுப்புவது என்பது, வரலாற்றிலிருந்து தப்பிச்செல்வதல்ல, மாறாக, உலகின் உண்மை நிலைகளில் மூழ்கி அதனை அன்பால் உருமாற்றுவதாகும் எனவும் எடுத்துரைத்தார்.

நம் வாழ்வின் இறுதி நேரத்தில், இயேசுவின் முன்பாக நிற்கிறோம் என எண்ணிக்கொண்டு, நம் வாழ்வின் முடிவுகளை எடுப்போம் என்ற விண்ணப்பத்துடன், தன் நண்பகல் மூவேளை செப உரையை நிறைவுச் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.