மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 119: 61-ல், “தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
எத்தகைய துன்பங்கள் நம்மை சூழ்ந்தாலும் இறைவார்த்தையை நாம் ஒரு நாளும் கைவிடாது இருக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.” என நமதாண்டவர் இயேசு கூறியதை நாம் வாசிக்கின்றோம்.
நாம் ஒளிமிக்க ஆண்டவரின் பாதையில் எந்நாளும் நடந்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில், “நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.” என வாசித்தோம்.
நமது அகப்பார்வை மீண்டும் நமக்குக் கிடைத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
கன மழையினால் அவதியுரும் மக்கள் அனைவருக்கும் உரிய உதவிகள் விரைவில் கிடைக்கப் பெற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.