வாசக மறையுரை (நவம்பர் 11)

பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் வாரம்
வியாழக்கிழமை
I சாலமோனின் ஞானம் 7: 22-8:1
II லூக்கா 17: 20-25
“இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது”
என் உள்ளமே நான் ஆட்சி செலுத்தும் இடம்:
பணக்காரர் ஒருவர், ஒருநாள் காலை வேளையில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். வழியில் அவர் ஒரு பிச்சைக்காரரைக் கண்டார். அந்தப் பிச்சைக்காரரோ பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தார். இதனால் பணக்காரர் அந்தப் பிச்சைக்காரரைப் பார்த்து, “கடவுள் உனக்கு இந்த நாளை நல்லநாளாக அமைத்துத் தருவாராக!” என்றார். அதற்குப் பிச்சைகாரர், “கடவுள் எனக்கு எந்த நாளையும் மோசமான நாளாகத் தரவில்லையே! எல்லா நாளையும் அவர் எனக்கு நல்ல நாளாகத்தான் தந்திருக்கின்றார்!” என்றார்.
பிச்சைக்காரரிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத பணக்காரர் அவரிடம், “கடவுள் உனக்கு மகிழ்ச்சியான வாழ்வினைத் தருவாராக!” என்றார். “எப்போது நான் கவலையோடு இருந்தேன் என்று இப்போது கடவுள் எனக்கு மகிழ்ச்சியான வாழ்வினைத் தருமாறு சொல்கிறீர்கள், நான் எப்போதும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்!” என்று தீர்க்கமாய்ப் பதிலளித்தார் பிச்சைக்காரர்.
இப்படிப் பணக்காரர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பிச்சைக்காரர் தெளிவாகவும் உறுதியாகவும் பதிலளிப்பதைப் பார்த்து வியந்துபோன பணக்காரர் அவரிடம், “உண்மையில் நீ யார்?” என்றார். “நான் அரசன்” என்று பிச்சைக்காரர் பதிலளித்ததும், “அரசரா, எங்கே நீ ஆட்சி செய்கிறாய்?” என்று பணக்காரர் அவரைப் பார்த்து ஏளனமாகக் கேட்டபோது, “என்னுடைய உள்ளத்தில்” என்று பிச்சைக்காரர் மிக உறுதிபடச் சொன்னார்.
ஆம், நமது உள்ளத்தில் இறைவனைக் குடியமர்த்தி, அங்கே அவரை ஆட்சி செலுத்தவிட்டால் அதுவே இறையாட்சி. இன்றைய நற்செய்தியில் இயேசு, “இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகின்றது” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“இறையாட்சி எப்போது வரும்?” என்று பரிசேயர்கள் இயேசுவைப் பார்த்துக் கேட்கின்ற கேள்வியோடு இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது. இயேசு தாம் செய்த அருமடையாளங்கள், வல்ல செயல்கள் போன்றவற்றின் மூலம் இறையாட்சி வந்துவிட்டது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தினார் (மத் 12:28). ஆனால், பரிசேயர்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை; நம்பவும் இல்லை.
பரிசேயர்களைப் பொறுத்தளவில் மெசியா என்பவர், தங்களை அடக்கி ஆண்டுகொண்டிருந்த உரோமையர்களின் ஆட்சியை முறியடித்துத் தன் ஆட்சியை நிறுவுவார் என்று எதிர்பார்த்தார்கள். இயேசு அவர்கள் நினைத்தது போன்று செயல்படாததால், இயேசுவை அவர்கள் மெசியா என்று ஏற்றுக்கொள்ளாமல், இறையாட்சி எப்போது வரும் அவரிடம் கேட்கின்றார்கள். அப்போது இயேசு அளிக்கும் பதில்தான், “இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகின்றது” என்கின்றார்.
இயேசு பரிசேயர்களுக்குக் கூறும் இப்பதிலிருந்து அவர் அவர்களிடம், இறையாட்சி என் வழியாய் உங்கள் நடுவில் செயல்படுகின்றது. நீங்கள்தான் அதைக் காண்பதற்குக் கண்ணிலாதவர்களாய் இருக்கின்றீர்கள் என்று சொல்லாமல் சொல்கின்றார். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், இறையாட்சி என்பது உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது (உரோ 14:17) என்பார்.
ஆகையால், இறையாட்சி என்பதை பரிசேயர்கள் நினைத்துக் கொண்டிருந்ததைப் போன்று நாம் நினைத்துக்கொண்டிருக்காமல், நமது அன்றாட வாழ்வில் நீதியைக் கடைப்பிடித்து, இறையாட்சி நம் நடுவில் செயல்பட நாம் கருவிகளாய் இருப்போம்.
சிந்தனைக்கு:
 இறையாட்சியில் எல்லாருக்கும் இடமுண்டு. அங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு கிடையாது.
 இயேசு கண்ட இறையாட்சிக் கனவை நனவாக்குபவர்களே அவரது உண்மையான சீடர்கள்
 இறைவனுடைய ஆட்சிக்குரியவற்றை நாடி, அவரது ஆட்சியில் பங்கு பெறுவோம்.
இறைவாக்கு:
‘இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது’ (1 கொரி 4:20) என்பார் புனித பவுல். எனவே, நாம் இறையாட்சிக்குரிய செயல்களை ஈடுபட்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.