ஒரு புன்னகை, நோயாளியின் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கும்
உரோம் நகரில் அமைந்துள்ள, இயேசுவின் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை துவக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நவம்பர் 05, இவ்வெள்ளி காலையில் அப்பல்கலைக்கழகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்குச் சிகிச்சை அளித்த அம்மருத்துவமனைப் பணியாளர்களுக்கு முதலில் நன்றி கூறினார்.
இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் வெள்ளிக்கிழமையாகிய இந்நாளில், அம்மருத்துவமனையின் பெயராகிய, இயேசுவின் திருஇதயத்தின் பக்தியை மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நினைவு
இயேசுவின் திருஇதயத்தை நாம் தியானிக்கையில், நினைவு, பேரன்பு, ஆறுதல் ஆகிய மூன்று சொற்களால் வழிநடத்தப்படுவோம் என்றுரைத்த திருத்தந்தை, நினைவு என்பது, இதயத்தோடு திரும்பி வருதலாகும் எனவும், ஆண்டவர் தன்னையே நமக்கு வழங்குவதையே இயேசுவின் திருஇதயம் நம்மிடம் காட்டுகின்றது எனவும் கூறினார்.
நம் தகுதியையோ, பணியின் தரத்தையோ பாராமல், கணக்கின்றி நமக்கு வழங்கப்படும் தனது நன்மைத்தனத்தை நினைவுகூருமாறு இயேசுவின் திருஇதயம் அழைப்புவிடுக்கின்றது எனவும், நினைவுகளின்றி நம் வேர்களை நாம் மறந்துவிடுவோம், வேர்களின்றி வளர்ச்சி கிடையாது எனவும் திருத்தந்தை கூறினார்.
இந்தப் பெருந்தொற்று காலத்தில் நம்மை மிகவும் வேதனைப்படுத்திய நேரங்களை நினைத்துப் பார்ப்பது மிகவும் நல்லது என்றுரைத்த திருத்தந்தை, நம் இதயத்தைத் தொட்ட யாரையோ அல்லது பொருளையோ நினைக்கையில், ஒரு குறிப்பிட்ட பாசம் அல்லது பாசமின்மை எழுவதை உணர்கிறோம் என்றும் கூறினார்.
இயேசுவின் திருஇதயம் நம் நினைவைக் குணப்படுத்துகிறது, வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நாம் அன்புகூரப்படுகிறோம் என்பதை அவ்விதயம் நினைவுபடுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, ஒவ்வொரு நாளும், அவசரமாக ஆற்றுகின்ற பணிகளில், அந்த நாளில் என்ன நடந்தது என்பதை நாம் மறக்கநேரிடும், ஆயினும், நாம் பார்த்த முகங்கள், கேட்ட நல்ல சொற்கள், புன்னகைகள் போன்றவற்றை நினைத்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
இத்தகைய நினைவுகள் மருத்துவமனைகளுக்கு மிக முக்கியம் என்றும், அது நோயாளியின் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கும், குணமளிக்கும் மற்றும், நம் இதயத்திற்கும் அது நல்லது என்றும் திருத்தந்தை கூறினார்.
Comments are closed.