நவம்பர் 8 : நற்செய்தி வாசகம்

நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-6
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு! அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.
எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ‘நான் மனம் மாறிவிட்டேன்’ என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.”
திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள்.
அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
லூக்கா 17: 1-6
யாருக்கும் இடறலாய் இருக்கவேண்டாம்!
நிகழ்வு
அது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில் ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில், இயேசுவின் பாடுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். அந்த ஆண்டும் அதுமாதிரி இயேசுவின் பாடுகளை நாடகமாக அரகேற்றும் நாள் வந்தது.
வழக்கத்திற்கு மாறாக அந்த ஆண்டு புதியவர் ஒருவர் இயேசுவாக நடித்தார். அவர் தன்மேல் சிலுவையைத் தூக்கிக்கொண்டு கல்வாரி மலையை நோக்கி நடக்கும்பொழுது, அவர்க்கு பிடிக்காத ஒருவர் கீழே இருந்துகொண்டு, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார். இது இயேசுவாக நடித்தவர்க்கு கடுங்கோபத்தை வரவழைத்தது. இதனால் அவர் சிலுவையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியவரை அடிஅடியென அடித்துத் துவைத்தார். நிலைமை மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்த நாடக இயக்குநர் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார். அதற்குள் கூட்டம் அங்கிருந்து கலைந்துசென்றதால், நாடகத்தை மறுநாள் அரகேற்றலாம் என்று முடிவுசெய்தார் இயக்குநர்.
மறுநாள் மக்கள் அனைவரும் கூடிவந்த பிறகு நாடகம் அரங்கேறியது. அன்றைய நாளில் முந்தைய நாளில் இயேசுவாக நடித்தவரை வசைபாடியவர் அங்கு இல்லை. இதனால் நாடக இயக்குநர், ‘இன்றைக்கு எந்தவோர் இடையூறும் இல்லாமல் நாடகம் அரங்கேறும்’ என்று மனதில் நினைத்துக்கொண்டார். நாடகம் தொடங்கி இயேசுவாக நடித்தவர் தன் தோள்மேல் சிலுவையைச் சுமந்துகொண்டு கல்வாரி மலையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்பொழுது எங்கிருந்தோ வந்த வசைபாடும் மனிதர் இயேசுவாக நடித்தவரை நோக்கி முந்தைய நாளைவிட கடுமையாக வசைபாடத் தொடங்கினார். இதனால் இயேசுவாக நடித்தவர்க்கு கடுமையாகக் கோபம் வர, அவர் கீழே இறங்கி வந்து அவரை அடித்துத் துவைத்தார். இதனால் அந்த இடமே போர்க்களமானது.
அவர்கள் இருவரும் சண்டைபோடுவதைப் பார்த்து மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். நாடக இயக்குநர்தான் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டார். பின்னர் அவர் இயேசுவாக நடித்தவரைப் பார்த்து, “இயேசுவாக நடிப்பவர் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்துகொள்வது நல்லதல்ல… அதனால் நாளைக்கு வேறோர் ஆளை வைத்து நாடகத்தை நடத்தப் போகிறேன்” என்று சற்று கோபத்தோடு சொன்னார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன இயேசுவாக நடித்த மனிதர், “தயவுசெய்து அப்படிச் செய்துவீடாதீர்கள்… இனிமேல் நான் எக்காரணத்தைக் கொண்டும் கோபம்கொள்ளமாட்டேன்” என்று உறுதிகூறினார். இதனால் நாடக இயக்குநர் அவரையே இயேசுவாக நடிக்க வைத்தார்.
மறுநாள் நாடகம் அரங்கேறியது. அன்று இயேசுவாக நடித்தவருடைய முகத்தில் அவ்வளவு அமைதி வெளிப்பட்டது; அவரை வழக்கமாக வசைபாடுகிறவன் அவ்வப்பொழுது அவரை வசைபாடிக்கொண்டிருந்தாலும் அவர் எதையும் கண்டுகொள்ளாமல் நடிப்பதிலேயே கவனமாக இருந்தார். வசைபாடியவனின் போக்கு எல்லைமீறிப் போவதைப் பார்த்த இயேசுவாக நடித்தவர், சிலுவையை இறக்கி வைத்துவிட்டுக் கீழே இறங்கி வந்தார். நாடக இயக்குநரும் மக்களும் இன்று என்ன நடக்கப் போகின்றதோ என்று பார்த்துக்கொண்டிருந்தனர். இயேசுவாக நடித்தவர் தன்னை வசைபாடியவனின் அருகில் வந்து, அவனுடைய காதுக்குள், “இயேசு உயிர்க்கட்டும்… அதன்பிறகு உன்னைக் கவனித்துக்கொள்கிறேன்” என்று சொல்லிச் சென்றார். இதற்குப் பின்பு இயேசுவாக நடித்தவரை வசைபாடிக்கொண்டிருந்தவன் வாயைத் திறக்கவேயில்லை.
இந்த நிகழ்வில் வருகின்ற வசைபாடுகின்றவன் இயேசுவாக நடித்தவர்க்கு எப்படி இடறலாக இருந்தானோ, அதுபோன்று பலரும் இன்று இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோர்க்கு இடறலாக இருக்கின்றார்கள். இவர்கட்கு எத்தகைய தண்டனை கிடைக்கும் என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
யார் சிறியோர்?
நற்செய்தியில் இயேசு, இச்சிறியோருள் எவரையும் பாவத்தில் விழச் செய்ய வேண்டாம்; இழிவாகக் கருதவேண்டாம் (மத் 18: 10) என்கின்றார். முதலில் யார் இந்தச் சிறியோர் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
இயேசு, சிறியோர் என்று குறிப்பிடுகின்ற அட்டவனையில், வயதில் சிறியவர்கள் மட்டும் கிடையாது; இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோர்; பாவிகள் (லூக் 15:1) எனப் பலர் அடங்குவர். இவர்களுள் ஒருவரையும் பாவத்தில் விழச் செய்துவிடக்கூடாது என்று இயேசு கண்டிப்பாகக் கூறுகின்றார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்கள், இயேசுவின்மீது நம்பிக்கைவைத்து வாழ்ந்து வந்த பாவிகள் மற்றும் வறிதண்டுபவர்களை இழிவாக நினைத்து, அவர்களைப் பாவத்தில் விழச் செய்தார்கள். அவர்களை நோக்கித்தான் இயேசு இத்தகைய வார்த்தைகளை உதிர்க்கின்றார்.
இடறலாக இருப்போர்க்கு எத்தகைய தண்டனை கிடைக்கும்?
இயேசு, “இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதைவிட, அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக்கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளுவது அவர்க்கு நல்லது” என்கின்றார்.
இயேசுவின் காலத்தில் இருவகையான எந்திரக் கற்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று சிறிய அளவில் இருந்த, பெண்கள் மாவரைக்கப் பயன்படுத்திய எந்திரக் கல். இன்னொன்று பெரியதும் சுமக்க முடியாதட்டும் கழுதை, எருது போன்ற விலங்குகளால் மட்டுமே இழுக்கக்கூடியதுமான எந்திரக் கல். நற்செய்தியில் இயேசு பயன்படுத்துவது இரண்டாவது வகையான கல். இத்தகைய கல்லை பிறர்க்கு இடறலாக இருப்போருடைய கழுத்தில் கட்டி, கடலில் ஆழ்த்தினால், அவர் யாருக்கும் இடறலாக இருக்க மாட்டார் என்பதலேயே இயேசு அப்படிக் கூறுகின்றார்.

Comments are closed.