வாசக_மறையுரை (நவம்பர் 03)
பொதுக்காலம் முப்பத்து ஒன்றாம் வாரம் புதன்கிழமை
I உரோமையர் 13: 8-10
II லூக்கா 14: 25-33
“யார் இயேசுவின் உண்மையான சீடர்?”
இயேசுவின்மீது பைத்தியமாக இருந்த சிறுமி:
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாகத் தன் அறைக்குச் சென்று, இயேசுவிடம் வேண்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் பத்து வயதுச் சிறுமியான ஜெசி. இந்த வழக்கத்தை அவளுக்கு அவளது மறைக்கல்வி ஆசிரியர் கற்றுக் கொடுத்திருந்தார்.
சிறு வயதிலேயே தங்களது மகள் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதையும், அவரிடம் அவள் ஒவ்வொரு நாளும் இரவும் தூங்கச் செல்வதற்கு முன் வேண்டுவதையும் கண்டு, ஜெசியின் பெற்றோர் மிகவும் வியப்படைந்தார்கள். ஒருநாள் ஜெசி வழக்கம்போல் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, இயேசுவிடம் வேண்டுவதற்காகத் தன் அறைக்குச் சென்று முழந்தாள் படியிட்டபோது, அவளுடைய தாய் அவளிடம் வேகமாக வந்து, “அன்பு மகளே! நீ ஏன், இயேசுவிடம் ‘உம்மை நான் மிகுதியாக செய்வதற்கான ஆற்றலைத் தா’ என்று கேட்கக் கூடாது” என்றார்.
ஜெசி தன் தாயை ஒருவினாடி உற்றுப் பார்த்தாள். “இயேசுவை நான் மிகுதியாக அன்பு செய்ய, அவரிடம் எனக்கு ஆற்றலைத் தருமாறு கேட்க வேண்டும் என்றுதானே சொல்கிறீர்கள்! இப்போதும் நான் இயேசுவின்மீது பைத்தியமாகத்தானே இருக்கின்றேன். இதற்கு மேலும் நான் இயேசுவின்மீது பைத்தியமாக இருப்பதற்கு, அவரிடம் ஆற்றலைத் தருமாறு கேட்கச் சொல்கிறீர்களா?” என்றாள். இதற்கு ஜெசியின் தாயால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆம், சிறுமியாக இருந்தபோதும் ஜெசி இயேசுவின் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள் அல்லது அவர்மீது பைத்தியமாக இருந்தாள். இவ்வாறு, இயேசுவை முழு முதலாக அன்பு செய்த வகையில், சிறுமி ஜெசி இயேசுவின் உண்மையான சீடர் ஆனாள். இன்றைய இறைவார்த்தை, இயேசுவின் உண்மையான சீடர் யார் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு, அருமடையாளங்களையும் வல்ல செயல்களையும் செய்ததால், அவரைப் பலர் பின்தொடர்ந்தனர். இப்படிப் பின்தொடர்ந்த யாவரும் தன்னுடைய உண்மையான சீடரில்லை என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் அவர் தனது சீடர் எப்படி இருக்கவேண்டும் என்று ஒருசில நியதிகளை வரையறுக்கின்றார். அப்படி அவர் வரையறுக்கும் முதலாவது நியதிதான், தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர் மற்ற எல்லாரையும் விடத் தன்னை மிகுதியாக அன்பு செய்யவேண்டும் என்பதாகும். இரண்டாவது நியதி, சிலுவையைத் தூக்கிக் கொண்டு தன்னைப் பின்தொடர வேண்டும் என்பதாகும்.
இந்த இரண்டு இரண்டு நியதிகளையும் கடைப்பிடித்து வாழ்பவர் மட்டுமே தன்னுடைய உண்மையான சீடராக முடியும் என்பதை இயேசு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.
முதல் வாசகத்தில், பவுல், “அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்” என்கிறார். இங்கே ‘அன்பு செலுத்துவது’ என்று பவுல் சொல்வதை தன்னுடைய குடும்பம், தன்னுடைய உறவின்மீது அன்பு செலுத்துவது என்று பொருள் எடுத்துக் கொள்ளக்கூடாது . அவர்களைக் கடந்து பிறர்மீதும் கடவுள்மீதும் அன்பு செலுத்து என்று பொருள் எடுத்துக் கொள்ளவேண்டும்.
எனவே, இயேசுவின் சீடர் அவரை முதன்மையான அன்பு செய்யவேண்டும். அந்த அன்பு மற்றவரை முழுமையாய் அன்புசெய்யத் தூண்ட வேண்டும். நாம் இயேசுவின்மீது எத்தகைய அன்பு கொண்டிருக்கின்றோம்? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
இயேசுவின் சீடர் அவரைக் கண்முன் கொண்டு செயல்பட வேண்டும்.
இயேசுவின் பொருட்டு சிரமப்பட, துன்பப்பட அஞ்சுகிறவர் அவரது உண்மையான சீடராக இருக்க முடியாது.
இயேசுவின்மீது கொள்ளும் அன்பு, எளியவரை அன்பு செய்யத் தூண்ட வேண்டும்.
இறைவாக்கு:
‘இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன்பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்’ (பிலி 3:8) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசுவை முழுமையாக அறிந்து, அன்பு செய்வோம். அவருக்காக நம் உயிரையும் தருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.