அக்டோபர் 22 : நற்செய்தி வாசகம்

நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?
நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார்.
கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
“நேர்மையானது எது எனத் தீர்மானிக்காமல் இருப்பதேன்?”
பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் வெள்ளிக்கிழமை
I உரோமையர் 7: 18-25a
II லூக்கா 12: 54-59
“நேர்மையானது எது எனத் தீர்மானிக்காமல் இருப்பதேன்?”
நல்லவனாய், நேர்மையுள்ளவனாய் இரு:
ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த மிகப்பெரிய எழுத்தாளர் வால்டர் ஸ்காட் (Walter Scott). இவர் சாகும் தறுவாயில் இருக்கும்போது, தன் மருமகனும் எழுத்தாளருமான லாக்ஹர்ட் (Lockhart) என்பவரை அழைத்து, “லாக்ஹர்ட்! உன்னிடத்தில் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விழைகிறேன். உன்னுடைய வாழ்க்கையில் நீ நல்லவனாய், நல்லொழுக்கமுள்ளவனாய், நேர்மையுள்ளவனாய், ஆண்டவருக்கு அஞ்சி வாழ்பவனாய் இரு. ஏனெனில், என்னைப் போன்று நீ சாகும் தறுவாயில் இருகின்றபொழுது, இவற்றைத் தவிர உனக்கு ஆறுதல் அளிக்கக்கூடியவை எவையும் அல்ல” என்றார்.
வால்டர் ஸ்காட் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து ஒவ்வொருவருக்கும் சொல்லக்கூடிய அறிவுரை மிகவும் முக்கியமானது. இன்றைய இறைவார்த்தை நல்லது எதுவென, நேர்மையானது எதுவெனத் தீர்மானித்து, அதன்படி வாழ நமக்கு அழைத்துத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
மனிதர்களுக்கு நிலத்தின் தோற்றத்தையும், வானின் தோற்றத்தையும் பார்த்துவிட்டு அடுத்து என்ன நடக்கும் என்று சொல்வது எளிது. ஆனால், அவர்களுக்கு நேர்மையானது எனத் தீர்மானித்து அதன்படி வாழ்வது மிகவும் கடினம். இன்றைய நற்செய்தியில் இயேசு, “நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆராய்ந்து பார்க்க ஆராய்ந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆராய்ந்து பாராமல் இருப்பது எப்படி?” என்று சொல்லிவிட்டு, “நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?” என்கிறார். மனிதர்களாகிய நாம் நேர்மையானது எதுவெனத் தீர்மானித்து அதன்படி வாழவேண்டும். இல்லையென்றால் ஆண்டவரின் நடுவர் இருக்கைக்கு முன் அதற்குரிய வெகுமதியைப் பெறுவோம்.
முதல் வாசகத்தில் பவுல், தனக்குள் ஏற்பட்ட உள்மனப் போராட்டத்தைப் பற்றிப் பேசுகின்றார். தான் நன்மை செய்ய விரும்பியும், அதை செய்ய முடியவில்லை என்று வருந்தும் பவுல், தன்னுள் இருக்கும் பாவமே அதைச் செய்யவிடாமல் தடுக்கிறது. இத்தகைய பாவம் நிறைந்த அல்லது சாவுக்கு உள்ளாகும் உடலினின்று இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார் என்கிறார்.
நன்மை செய்ய விரும்பியும் நம்மால் நன்மை செய்ய முடியாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கும் இந்த வலுக்குறைந்த உடலிருந்து கடவுள்தான் விடுவிப்பார் எனில், அவர்மீது பற்றுக்கொண்டு, அவருடைய ஆவியால் இயக்கப்படுவதே சிறந்தது. ஏனெனில், நாம் கடவுளின் ஆவியால் இயக்கப்படும்போது நம்மால் நல்லது எது என, நேர்மையானது எது எனத் தீர்மானித்து, அதன்படி வாழ முடியும்.
இறைவாக்கு:
 நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள் (கொலோ 3:1).
 கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல் (யோவா 6:29)
 கடவுளின் ஆவியால் இயக்கப்படுபவர்களே கடவுளின் மக்கள் (உரோ 8:14)
சிந்தனைக்கு:
‘வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது’ (யோவா 6:63) என்பார் இயேசு. ஆகையால், நாம் வாழ்வு தரும் தூய ஆவியால் இயக்கப்பட்டு, கடவுளுக்கு உகந்த வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.