வாசக மறையுரை (அக்டோபர் 19)
பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I உரோமையர் 5: 12, 15b, 17-19, 20b-21
II லூக்கா 12: 35-38
“விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்”
திடீரென இறந்த நாத்திகர்:
ஒரு நகரில் கடவுள்மீது ஆழமான நம்பிக்கைகொண்ட ஒரு கிறிஸ்தவக் குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பம் இருந்த அதே தெருவில் ஒரு நாத்திகர் வாழ்ந்து வந்தார். அந்த நாத்திகரை யாருக்கும் பிடிக்காது. காரணம் அவர் ஒரே குடியும் கும்மாளமுமாக இருந்தார்.
ஒருநாள் அந்த நாத்திகர் திடீரென இறந்தார். இச்செய்தியை கிறிஸ்தவர் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு, “மனம்மாறுவதற்குக் கொஞ்சம்கூட அவகாசம் கொடுக்காமல் கடவுள் இந்த நாத்திகரை எடுத்துக்கொண்டுவிட்டாரே!” என்று வருத்தப்பட்டார். அதற்கு அவருடைய மனைவி, “என்ன! கடவுள் அந்த நாத்திகருக்கு மனம்மாற அவகாசம் கொடுக்கவில்லையா? அந்த நாத்திகர் இறந்தபோது, அவருக்கு வயது ஐம்பத்து மூன்று. அத்தனை ஆண்டுகள் கடவுள் அவருக்கு மனம்மாற அவகாசம் கொடுத்திருந்தும், அவர் மனம்மாறாமல் இருந்தது அவருடைய தவறுதான்” என்றார்.
ஆம், யாருக்கு எப்பொழுது இறப்பு வரும் என்பது நிச்சயமில்லாததால், ஒவ்வொரு நாளையும்; ஏன், ஒவ்வொரு நொடியையும் நாம் விழிப்போடு வாழ்வது இன்றியமையாதது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மானிட மகனுடைய வருகைக்காக விழிப்பாய் இருக்க வேண்டும் என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
அறிவிலும் தொழில்நுட்பமும் போக்குவரத்து வசதிகளும் பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்தில், நாம் நினைக்கின்ற இடத்திற்கு, நினைக்கின்ற நேரத்திற்குப் போய் வரலாம். ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இயேசுவின் காலத்தில் அப்படியில்லை. திருமண விருந்திற்கோ அல்லது வேறு எதற்கோ வெளியே செல்லும் தலைவர், போன வேலையை முடித்துக்கொண்டு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திரும்பி வந்து, கதவைத் தட்டலாம். உடனே பணியாளர் தலைவருக்காகக் கதவைத் திறக்க வேண்டும். அப்படிக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் ‘விழிப்பாய் இருக்கும் பணியாளர்’ பேறுபெற்றவர் என்கிறார். ஏனெனில், தலைவரே அந்தப் பணியாளருக்குப் பணிவிடை செய்வார் என்கிறார் இயேசு.
மானிடமகனுடைய இரண்டாம் வருகையைக் குறித்து பேசும் இயேசு, அவருடைய வருகை ஒரு திருடனைப் போல, எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் ஒவ்வொருவரும் விழிப்பாய் இருந்து, தங்கள் கடமையை ஆற்றவேண்டும். அப்படி விழிப்பாய் இருந்து தங்கள் கடமையை ஆற்றுவோர் மானிட மகனிடமிருந்தே பணிவிடை பெறும் பேறு பெறுவர் என்கிறார் இயேசு.
ஒருவர் எப்போது விழிப்பாய் இருக்க முடியும் எனில், அவர் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றபோது என்று சொல்லலாம். இன்றைய முதல் வாசகத்தில் இயேசு கிறிஸ்து ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய திருவுளத்தை நிறைவேற்றுவது பற்றி வாசிக்கின்றோம். இயேசுவின் கீழ்ப்படிததால், அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையினையும் மனிதர்கள் பெறுகின்றார்கள். ஆகையால், நாம் இறைவனின் அருள்கொடையினைப் பெற, விழிப்போடு இருப்போம். அதற்கு நாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்.
சிந்தனைக்கு:
விழிப்பாய் இருப்போர் கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர் (சாஞா 6:15)
விழிப்பாய் இருந்து உன்னையே காத்துக்கொள் (சீஞா 12:11)
அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது (மத் 24:36)
Comments are closed.