மாணவர் உலக நாள், அப்துல் கலாமின் 90வது பிறந்த நாள்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான APJ அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதியை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், மாணவர்கள் உலக நாளாக 2010ம் ஆண்டில் அறிவித்து சிறப்பித்து வருகிறது.

அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையில் சுடர்விட்ட கடின உழைப்பு, அர்ப்பணம், மற்றும், விடாமனஉறுதி ஆகிய பண்புகளையும், மாணவர்கள் மற்றும், இளையோருக்கு தன்னம்பிக்கையூட்டும் உரைகளை ஆற்றி, அவர்களை அவர் ஊக்குவித்து வந்ததையும் கவுரவிக்கும் நோக்கத்தில், அவரின் பிறந்த நாளை, மாணவர்கள் உலக நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது.

அப்துல் கலாம் அவர்களின் 90வது பிறந்த நாளான அக்டோபர் 15, இவ்வெள்ளியன்று, இந்தியாவின் பல்வேறு அரசியல் தலைவர்கள், தங்களின் புகழ் அஞ்சலியை அவருக்குச் செலுத்தியுள்ளனர்.

விண்வெளி அறிவியலாளரான கலாம் அவர்கள், 2002ம் ஆண்டில் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று, 2007ம் ஆண்டுவரை அர்ப்பணத்தோடு பணியாற்றினார். அதற்குப்பின்னர், தன் வாழ்வை கல்விப்பணிக்கென அர்ப்பணித்திருந்தார். இவர் 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி, ஷில்லாங்கில், மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுதே மாரடைப்பில் காலமானார்.

1931ம் ஆண்டு, அக்டோபர் 15ம் தேதி, தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள், இந்திய விண்வெளித் துறையான இஸ்ரோவின் தலைவராகப் பணியாற்றியவர். ’ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், வலிமையான, வளமான மற்றும் திறமையான இந்தியாவை உருவாக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தவர். வாஜ்பாய் அவர்கள், இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றியபோது அப்துல் கலாம் அவர்கள்  தலைமையில், இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்தி, தனது பலத்தை உலகிற்கு வெளிக்காட்டியது.

Comments are closed.