இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
செபமாலை மாதமான இம்மாதத்தின் பதினைந்தாம் நாளான இன்று, சமூகத்தால் பல நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பிராத்திப்போம். புனித அவிலா தெரசாவைப் போல அவர்கள் சமூகத்தில் நல்ல மரியாதையும், கௌரவமான அந்தஸ்தையும் பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தியில், “இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நம்மைப் படைத்த நம் தந்தைக்குத் தெரியும் தன் பிள்ளைகளை எப்படி பராமரிப்பது என்று. நம் எதிர்காலத்தைக் குறித்து கவலையின்றி இறைவன் மேல் விசுவாசத்தோடு இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
கத்தோலிக்கத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தவர்களின் ஒருவரான அவிலாவின் புனித தெரேசாவை திருச்சபைக்குத் தந்தருளின நம் தந்தைக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.