அக்டோபர் 15 : நற்செய்தி வாசகம்
உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7
அக்காலத்தில்
ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.
என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————–
“அஞ்சாதீர்கள்; சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்”
பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
I உரோமையர் 4: 1-8
II லூக்கா 12: 1-7
“அஞ்சாதீர்கள்; சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்”
எட்டுப் படுக்கையறைகள் வைத்திருந்த ஜோசப் ஸ்டாலின்:
லெனினிற்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தை ஆட்சி செய்தவர் ஜோசப் ஸ்டாலின் (1878-1953) இவரைப் பற்றிச் சொல்லப்படுகின்ற மிகவும் வியப்பூட்டும் செய்தி, மாஸ்கோவில் இவர் எட்டுப் படுக்கையறைகள் வைத்திருந்தார் என்பதுதான்.
‘ஒரு படுக்கையறை போதாதா, எதற்காக இவருக்கு எட்டுப் படுக்கையறைகள்?’ என்று நாம் கேள்வி எழுப்பினால், அதற்குப் பதிலாக வருவது, இவருக்கு இருந்த சாவைப் பற்றிய அச்சம்தான். ஆம், ஜோசப் ஸ்டாலினுக்கு எதிரிகள் பலர் இருந்தனர். அவர்களால் எங்கே தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சித்தான், எட்டுப் படுக்கையறைகளில் ஏதாவது ஒரு படுக்கையறையில் மாற்றிப் மாற்றிப் படுத்துக் கொண்டிருந்தாராம்!
இச்செய்தியைக் கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், ஒரு நாட்டுத் தலைவரே எதிரிகள் தன்னுடைய உயிரை எடுத்துவிடுவார்களோ என்று அஞ்சியது வியப்பாக இருக்கின்றது. ஜோசப் ஸ்டாலின் என்றில்லை. பலரும் இப்படித்தான் பல காரணங்களுக்காக அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை, “அஞ்சாதீர்கள்” என்ற நம்பிக்கையூட்டும் செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கால் வைக்கும் இடத்திலெல்லாம் கண்ணிவெடி இருந்தது எனில், அப்படியொரு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! மிகவும் அச்சமூட்டுகின்றதாக இருக்கின்றது அல்லவா! இன்றைக்குப் பல இடங்களில் வாழ்வதற்கு மிகவும் அச்சமாக இருக்கின்றது. அது மனிதர்கள், இயற்கைப் பேரிடர்கள், நோய்நொடிகள் முதலியவற்றால் ஏற்படும் அச்சமாகக்கூட இருக்கலாம். இந்நிலையில் ஆண்டவர் இயேசு, “அஞ்சாதீர்கள்” என்று ஆறுதல் அளிக்கும் செய்தியைத் தருகின்றார்.
அஞ்சாதீர்கள் என்று சொன்ன இயேசு, அதற்கான காரணங்களையும் சொல்கின்றார். அதில் முதலாவது காரணம், மனிதர்களால் உடலை மட்டுமே கொல்ல முடியும் என்பதால்தான். இரண்டாவது காரணம், நாம் சிட்டுக் குருவிகள் பலவற்றையும்விட மேலானவர்கள் என்பதாலாகும். இயேசுவின் காலத்தில் இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்கப்பட்டன. இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில், இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக் குருவிகளை விற்பவரிடம் ஒருவர் இரண்டு காசுகளுக்கு ஆறு சிட்டுக்குருவிகள் என்று பேரம் பேசினால், அவர் அதைத் தரத் தயாராக இருந்தார். அப்படிப்பட்ட சிட்டுக் குருவிகளைக்கூட கடவுள் மறக்கவில்லை. மனிதர்கள் அவற்றைவிட மேலானவர்கள். அதனால் மனிதர்களுக்கு அஞ்சவேண்டாம்; ஆண்டவருக்கு அஞ்சினால் போதும் என்கிறார் இயேசு.
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்தல் என்றால் என்ன என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருப்பவர் முதல் வாசகத்தில் வருகின்றன ஆபிரகாம். ஆம், ஆபிரகாம் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தார் அதனால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராக்கி, யாருக்கும் அஞ்சாமல் வாழ்ந்து வந்தார். நாமும் ஆண்டவருக்கு மட்டுமே அஞ்சி, அவர் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தால் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.
இறைவாக்கு:
நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான் (எசா 28:16).
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன் (திபா 23:4).
அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் (யோசு 1:9)
சிந்தனைக்கு:
‘நீர் அவர்களுக்கு அஞ்சாதே! ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார்’ (இச 3:22) என்பார் ஆண்டவர். எனவே, ஆண்டவர் நம் பக்கம் இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு அஞ்சாது, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்!
Comments are closed.