திருத்தந்தையைச் சந்தித்த ஜெர்மன் குடியரசின் சான்செல்லர்
கடந்த 16 ஆண்டுகளாய் ஜெர்மன் குடியரசின் சான்செல்லராகப் பணியாற்றிய ஆஞ்செலா மெர்க்கெல் (Angela Merkel) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அக்டோபர் 7, இவ்வியாழனன்று, திருப்பீடத்தின் நூலக அறையில் 45 நிமிடங்களுக்கு மேலாக, தனியே சந்தித்துப் பேசினார்.
ஜெர்மன் குடியரசின், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவுடன் திருப்பீடம் சென்ற மெர்க்கெல் அவர்கள், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசியபின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜெர்மன் குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டின் கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவை குறித்த நிறைவானச் சூழலைக் குறித்து, இச்சந்திப்புகளில் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.
மேலும், அக்டோபர் 7 இவ்வியாழனன்று, புனித செபமாலையின் அன்னை மரியா திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பக்தி முயற்சியை விசுவாசிகள் வளர்க்கவேண்டும் என்ற அழைப்பை, தன் டுவிட்டர் செய்தி வழியே வெளியிட்டார்.
“இன்று, திருஅவை புனித செபமாலையின் அன்னை மரியா திருநாளை சிறப்பிக்கிறது. அக்டோபர் மாதத்தில், அன்னை மரியா, தன் மகனிடம் உங்களை அழைத்துச்செல்லும் வண்ணம், செபமாலை பக்திமுயற்சியை, ஒவ்வொருநாளும் கடைபிடிக்க உங்களை அழைக்கிறேன்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.
ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
அக்டோபர் 7, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3.465 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
Comments are closed.