#வாசக மறையுரை (அக்டோபர் 08)
பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் வெள்ளிக்கிழமை
I யோவேல் 1: 13-15, 2: 1-2
II லூக்கா 11: 15-26
பெயல்செபூலும் இயேசுவும்
விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி?
சிறு வயதிலியே மிக உயர்ந்த அரசாங்கப் பொறுப்பில் அமர்ந்த ஓர் இளைஞனைப் பலரும் பல்வேறு விதமாக விமர்சித்தார்கள். இதனால் மனம் உடைந்துபோன அந்த இளைஞன் தனக்குத் தெரிந்த ஓர் உயர் அதிகாரியைச் சந்தித்துத் தன் நிலையை அவரிடம் எடுத்துச் சொன்னான்.
“இன்றைக்கு நீ எப்படி விமர்சனங்களைச் சந்திக்கின்றாயோ, அப்படி நானும் அன்றைக்குப் பலவிதமான விமர்சனங்களைச் சந்தித்தேன்” என்று பேசத் தொடங்கிய அந்த உயரதிகாரி, “நான் பலவிதமான விமர்சனங்களைச் சந்தித்தபோது, ஒரு பெரியவர் எனக்குச் சொன்ன அறிவுரை இது: ‘உன்மீது வைக்கப்படும் விமர்சனத்தில் உண்மை இல்லையென்றால், அதைக் கண்டுகொள்ளாதே! அறியாமையில் உன்மீது விமர்சனம் வைக்கப்படுகின்றது எனில், அதை நீ புன்னகையோடு கடந்துவிடு. உன்மீது வைக்கப்படும் விமர்சனத்தில் நியாயமில்லை எனில், அதைப் புறக்கணித்துவிடு. ஒருவேளை உன்மீது வைக்கப்படும் விமர்சனத்தில் நியாயம் இருந்தால், அதை நீ கருத்தில் எடுத்துக்கொண்டு, உன்னைத் திருத்திக்கொள்.’ பெரியவர் சொன்ன இந்த அறிவுரையைக்கேட்ட பின், என்மீது சுமத்தப்படும் விமர்சனங்களை எப்படி நான் எதிர்கொள்வது என்பதற்கான தெளிவு கிடைத்திருக்கின்றது. இப்பொழுது நிம்மதியாக வாழ்கின்றேன்” என்றார்.
உயரதிகாரிடம் பேசிய பின் ஒரு தெளிவு கிடைத்ததால், தன்மீது சுமத்தப்படும் விமர்சனங்களை மன உறுதியோடு எதிர்கொள்வதற்குத் தயாரானான் அந்த இளைஞன்.
ஆம், இன்று பலர் தங்கள்மீது சுமத்தப்படும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் மனமுடைந்து போவதைக் காணமுடிகின்றது. இந்நிலையில் இந்த நிகழ்வும், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான தெளிவினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பெலிஸ்திய நகரான ‘எக்ரோன்’ என்ற இடத்தில் இருந்த மக்கள் வழிபட்டு வந்த ஒரு தெய்வம்தான் பெயல்செபூல் (2 அர 1:2). ‘பேய்களின் தலைவனான’ இந்தப் பெயல்செபூலைக் கொண்டுதான் இயேசு பேய்களை ஓட்டுவதாகப் பரிசேயர்கள் இயேசுவை விமர்சிக்கின்றார்கள். இயேசு தூய ஆவியாரின் வல்லமையால் பேய்களை ஓட்டிவந்தார் (திப 10:38). அப்படி இருக்கும்போது, பரிசேயர்கள் இயேசுவின்மீது வைத்த இந்த விமர்சனத்தில் எந்தவோர் அடிப்படை உண்மையும் இல்லை என்பதால், இயேசு அவர்களுக்குச் சரியான பதிலளித்து, அவர்களின் வாயை அடைக்கின்றார்.
இயேசு பரிசேயர்களுக்கு அளித்த பதிலிலிருந்து, தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் நிலைப்பதில்லை என்பதும், இயேசு தூய ஆவியாரால்தான் பேய்களை ஓட்டினார் என்பதும், இயேசு பேய்களை ஒட்டியதன் மூலம் இறையாட்சி வந்துவிட்டது என்பதும், இயேசு தீய ஆவியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார் என்பதும் தெளிவாகின்றது. மேலும், பரிசேயர்கள் தன்மீது வைத்த விமர்சனத்தில் உண்மை இல்லை என்பதால் அதனால் இயேசு பாதிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகின்றது. ஆகையால், உண்மையில்லாத விமர்சனங்களால் பாதிக்கப்படாமல், நமது இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம்.
சிந்தனைக்கு:
எனக்கு விமர்சனங்களைப் பிடிக்கும் அவற்றால் நான் வலிமை பெறுகின்றேன் – லெப்ரோன் ஜேம்ஸ்.
விமர்சனத்தைத் தவிர்க்க ஒரு வழி எதுவும் சொல்லாமலும், எதையும் செய்யாமலும், எதுவுமே இல்லாமலும் இருப்பதுதான் – அரிஸ்டாட்டில்
பழுத்த மரமே கல்லடிபடும்
ஆன்றோர் வாக்கு:
‘வளர்ச்சிக்குரிய விதமாய் வைக்கப்படும் விமர்சனங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்கின்றபோது, ஒருவர் அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றார்’ என்பார் விண்டி ஸ்டார்லேன்ட் என்ற அறிஞர். ஆகையால், நியாயமற்ற விமர்சனங்களைப் புறந்தள்ளி, நியாயமான விமர்சனங்களைக் கொண்டு, இறைவழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.