அக்டோபர் 6 : நற்செய்தி வாசகம்

ஆண்டவரே, எங்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4
அக்காலத்தில்
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.
அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்” என்று கற்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
“அளவில்லா அன்புள்ள கடவுள்”
பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் புதன்கிழமை
I யோனா 4: 1-11
II லூக்கா 11: 1-4
“அளவில்லா அன்புள்ள கடவுள்”
நம்மைச் புடைசூழ்ந்து வரும் கடவுளின் பேரன்பு:
சாகும் தறுவாயில் இருந்த ஒரு பெண்மணிக்கு நோயில்பூசுதல் அருளடையாளம் வழங்கச் சென்றிருந்தார் ஒரு பங்குப்பணியாளர். அந்தப் பெண்மணி கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர், அவர் பங்குப் பணியாளரிடம், “சுவாமி! இரண்டு சாத்தான்கள் எப்பொழுதும் என்னைச் சூழ்ந்துகொண்டு என்னை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன. அவை இரண்டும் நான் இறந்தபிறகு என்னைப் பாதாளத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடுமோ என்று அச்சமாக இருக்கின்றது’ என்று பதற்றத்தோடு பேசினார்.
இதைக் கேட்டதும் பங்குப்பணியாளர், ‘இந்தப் பெண்மணிதான் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவராயிற்றே! அப்படியிருக்கையில் இரண்டு சாத்தான்கள் எப்படி இவரைச் சூழ்ந்துகொண்டு இவரை அச்சுறுத்தும்?’ என்று யோசிக்கத் தொடங்கினார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இதனால் அவர் அந்தப் பெண்மணியிடமிருந்து விடைபெற்று வந்து, மீண்டுமாக அதைப் பற்றியே சிந்தித்தார். அப்பொழுதுதான் அவருக்குத் திருப்பாடல் 23:6 இல் இடம்பெறும், “என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்” என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
உடனே அவர் அந்தப் பெண்மணியிடம் வந்து, “அம்மா! உங்களைச் சூழ்ந்து இருப்பது இரண்டு சாத்தான்கள் அல்ல; கடவுளின் அருள்நலமும் பேரன்பும்தான். அவை உங்களைப் பாதாளத்திற்கு அல்ல, விண்ணகத்திற்கு இட்டுச் செல்லும்” என்று நம்பிக்கையளித்துவிட்டு திரும்பினார். இதனால் அந்த பெண்மணி கடவுளின் அருள்நலமும் பேரன்புதான் என்னைச் சூழ்ந்திருக்கின்றது என்று ஆறுதல் அடைந்து, நிம்மதியாகத் தன் ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார்.
ஆம், நம்மைக் கடவுளின் அருள்நலமும், அவரது பேரன்பும் நம்மைச் புடைசூழ்ந்து இருப்பதால் நமக்கு எந்தவோர் ஆபத்தும் இல்லை. இன்றைய இறைவார்த்தை கடவுள் தன் பேரன்பினால், தவற்றை உணர்ந்த நினிவே நகர மக்களித்து, அவர்மேல் அனுப்புவதாக இருந்த தண்டனையை அனுப்பாததைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டவராகிய கடவுள் யோனாவை நினிவே நகர் மக்களிடம் முதலில் அனுப்பியபோது, அவர் அங்கே போகாமல், தர்சீசுக்குத் தப்பியோடினார். காரணம், நினிவே நகரத்தவர் பிறஇனத்தவர் என்பதாலும், ஆண்டவர் அளவுகடந்த அன்புகொண்டவர், அவர் குற்றத்தை உணர்வோரை மன்னிக்கின்றவர் என்பதால்தான். இவ்வாறு ஆண்டவரிடமிருந்து தப்பியோடிய யோனாவை அதிசயமாகக் காப்பாற்றி, மீண்டுமாக அவரை நினிவே நகர் மக்களிடம் அவரை அனுப்பி வைக்கின்றார். அவரும் கடவுள் தனக்குச் சொன்ன செய்தியை மக்களிடம் அறிவித்தபொழுது, அவர்கள் மனம்மாறுகின்றார்கள். ஆகவே கடவுள் அவர்கள்மேல் அனுப்புவதாக இருந்த தண்டனையை அனுப்பாமல் விடுகின்றார்.
இதனால் நினிவே நகர் மக்கள் அழிந்துபோக வேண்டும் என்று நினைத்து, அவர்கள் அழிந்து போகாமல் இருப்பதைக் கண்டு ஆண்டவரிடம் சினம்கொண்டு, வாழ்வதை விடச் சாவதே மேல் நினிவே என்று நகரை விட்டு வெளியேறுகின்றார் யோனா. அப்பொழுது ஆண்டவர் அவருக்கு ஓர் ஆமணக்குச் செடியின் வழியாக உண்மையை உணர்த்தி, ஒரு சாதாரண செடிக்கு நீ இரக்கம்காட்டும்போது, நினிவே என்ற மாநகரில் உள்ளவர்களுக்கு இரக்கம் நான் காட்டக்கூடாதா? என்கிறார். ஆம், கடவுள் இரக்கமும் பேரன்பும் கொண்டவர். அதனால்தான் அவர் தவற்றை உணர்ந்த நினிவே நகர் மக்களின்மீது இரக்கத்தையும் பேரன்பையும் காட்டினார்.
நாம் கடவுளின் இப்பேரன்பை உணர்ந்தவர்களாய், அவரது இயல்பை உணர்ந்து, நற்செய்தியில் இயேசு சொல்வதுபோல் அவரது திருப்பெயரைப் போற்றிப் புகழ்வோம்.
சிந்தனைக்கு:
 ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினங்கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர் (விப 34:6).
 ஆண்டவர் நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர் (திபா 103:8)
 தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் (எசே 33:11)
இறைவாக்கு:
‘நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள்’ (ஆமோ 5: 14) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் தீமையை விட்டுவிட்டு நன்மையை நாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.