பன்மைத்தன்மை எப்போதும் வளமை சேர்ப்பது

நம்பிக்கை மற்றும் ஒளி (Foi et Lumière) என்ற உலகளாவிய அமைப்பு, ஐந்து கண்டங்களின் பல நாடுகளில் பரப்பிவரும் அன்பு மற்றும் வரவேற்பு ஆகிய செய்தி, நற்செய்தியின் மையம் என்றும், இச்செய்தி, ஒவ்வொரு மனிதரும், குறிப்பாக, மிகவும் புறக்கணிக்கப்பட்ட மனிதரும் கடவுளால் அன்புகூரப்படுகின்றார், மற்றும், திருஅவையிலும் உலகத்திலும் அவர் ஓர் இடத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவுபடுத்துகின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கூறினார்.

Foi et Lumière அதாவது நம்பிக்கை மற்றும் ஒளி என்ற உலகளாவிய அமைப்பு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, அவ்வமைப்பின் ஐம்பது பிரதிநிதிகளை, அக்டோபர் 2, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, மனநலம் குன்றியவர்கள், குறிப்பாக இளையோர் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்கு அவ்வமைப்பு ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டோர், அவர்களின் குடும்பங்கள் மற்றும், நண்பர்களுடன், 1971ம் ஆண்டில் லூர்து திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டபோது, அன்னை மரியாவின் அன்புப் பார்வையில், தூய ஆவியாரின் தூண்டுதலால் உருவான இந்த அமைப்பு உயிர்த்த ஆண்டவரின் ஒளியும், வல்லமையும், சமுதாயத்தில், ஏன் திருஅவையிலும்கூட சிலநேரங்களில் ஒதுக்கப்பட்ட பலருக்கு நம்பிக்கையளிக்கிறது  என்று திருத்தந்தை கூறினார்.

அன்பு மற்றும் வரவேற்பு ஆகிய செய்தி, “சிறியோரின் நற்செய்தி” என்றுரைத்த திருத்தந்தை, “சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்? ஆனால், கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்” (1 கொரி.1:26-29) என்று பவுலடிகளார் கொரிந்தியருக்கு கூறியிருப்பதையும் குறிப்பிட்டார்.

இந்த உலகளாவிய அமைப்பு மேற்கொள்ளும் திருப்பயணங்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வுகளாகவும் உள்ளன என்று பாராட்டிப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளோர், மற்றும், கைவிடப்பட்டோரை வரவேற்று அவர்களை மகிழ்வித்துவரும் பணிகளை, தொடர்ந்து ஆற்றுமாறு ஊக்கப்படுத்தினார்.

Comments are closed.