தாத்தாக்கள், பாட்டிகளுக்கு திருத்தந்தை நல்வாழ்த்து

இத்தாலி நாட்டில் தாத்தாக்கள், பாட்டிகள் நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், இத்தாலிய மொழியில் மட்டும் பதிவுசெய்துள்ள குறுஞ்செய்தியில், அனைத்து தாத்தாக்கள், மற்றும், பாட்டிகளுக்கு, தன் நல்வாழ்த்தையும், அவர்களின் சான்று வாழ்வுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

“கடவுள், மிகப்பெரிய எண்ணிக்கையில் தாத்தாக்கள், பாட்டிகள் உள்ள ஒரு சமுதாயத்தைக் கொண்டிருக்கிறார். அவர்கள், கடவுளின் பிரமாணிக்கமுள்ள அன்பிற்கு, தனிச்சலுகைபெற்ற சான்றுகள். அவர்கள், சிறார் மற்றும், இளையோருக்கு கிறிஸ்தவ நம்பிக்கையைக் கற்றுக்கொடுப்பதற்கு இன்றியமையாதவர்கள். அனைத்து தாத்தாக்கள், பாட்டிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அவர்களின் சான்று வாழ்வுக்கு எனது நன்றி” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

இத்தாலியில், தாத்தாக்கள், பாட்டிகள் நாள், அக்டோபர் 2ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு தேதிகளில் சிறப்பிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில், தாத்தாக்கள், பாட்டிகள் உலக நாள், இயேசுவின் தாத்தா, பாட்டியான புனிதர்கள், சுவக்கீன், மற்றும், அன்னாள் விழாவுக்கு முந்தைய ஞாயிறன்று சிறப்பிக்கப்படுமாறு அறிவித்துள்ளார்.

மேலும், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, திருப்பீடத் தூதர் பேராயர் Fortunatus Nwachukwu, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் முன்னாள் செயலர் பேராயர் José Octavio Ruiz Arenas ஆகியோரையும், அக்டோபர் 2, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

Comments are closed.