† இன்றைய திருவிழா † (அக்டோபர் 2)

✠ தூய காவல் தேவதூதர்களின் நினைவு ✠
(Memorial of the Holy Guardian Angels)
நினைவுத் திருவிழா: அக்டோபர் 2
தூய காவல் தேவதூதர்களின் நினைவுத் திருநாள் என்பது, கத்தோலிக்க திருச்சபையினால் அனுசரிக்கப்படும் நினைவுத் திருநாட்களில் ஒன்றாகும். அக்டோபர் மாதம் 2ம் தேதி அனுசரிக்கப்படும் இந்நினைவுத் திருநாளானது, சில இடங்களில், “தெய்வீக வணக்கத்திற்கான சபையின்” (Congregation for Divine Worship) அனுமதியுடன் செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிறன்று அனுசரிக்கப்படுகின்றது. கத்தோலிக்கர்கள், கி.பி. 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாதுகாவல் தேவதூதர்களை நினைத்து பலிபீடங்களை அமைத்தனர். மற்றும், காவல் தேவதூதர்களை கௌரவப்படுத்துவதற்கான உள்ளூர் கொண்டாட்டங்கள், கி.பி. 11ம் நூற்றாண்டிற்கு பின்னோக்கிச் செல்கின்றன. இந்நினைவுத் திருவிழாவானது, “ஆங்கிலிகன் சமூகத்திலுள்ள” (Anglican Communion) சில “ஆங்கிலோ-கத்தோலிக்கர்களாலும்” (Anglo-Catholics), தொடர்ந்து “ஆங்கிலிகன் இயக்கத்தின்” (Anglican movement) பெரும்பாலான சபைகளாலும் பின்பற்றப்படுகிறது.
தேவதூதர்களுக்கான பக்தி என்பது, யூத மதத்திலிருந்து கிறிஸ்தவ திருச்சபைகளுக்குப் பெறப்பட்ட ஒரு பண்டைய பாரம்பரியம் ஆகும். இந்நினைவுத் திருநாளானது, ஆரம்பத்தில் “ஃபிரான்சிஸ்கன் சபையினரால்” (Franciscan Order) கி.பி. 1500ம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. கி.பி. 1607ம் ஆண்டு “பொது ரோம நாள்காட்டியில்” திருத்தந்தை “ஐந்தாம் பவுல்” (Pope Paul V) அவர்களால் இந்நினைவுத் திருவிழா நிலை நிறுத்தப்படும்வரை, இன்ன பிற நினைவுத் திருவிழாக்கள் போலவே, இதுவும் உள்ளூர் கொண்டாட்டமாகவே இருந்தது. 1976ம் ஆண்டிலிருந்து இது நினைவுத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
ஒரு தேவதூதர் தமது சிறு குழந்தைகளை உண்மையான, மற்றும் கற்பனையான ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறார் என்பது கத்தோலிக்க பெற்றோரிகளின் பெரும் ஆறுதலளிக்கும் அம்சமாக அமைந்துள்ளது. பாதுகாவல் தேவதூதர் என்பவர், சிறு பிள்ளைகளுக்கானவர் மட்டுமல்லர்.
காவல் தேவதூதர்களின் முக்கிய பணிகளாவது, கடவுளுக்கு முன்பாக தாம் பாதுகாப்பவர்களை பிரதிநிதித்துவம் செய்வதுவும், எப்பொழுதும் அவர்களைக் கண்காணிப்பதுவும், அவர்களுக்கு அவர்களுடைய ஜெபத்திற்கு உதவுவதும், மற்றும் அவர்கள் மரித்தபோது அவர்களுடைய ஆன்மாவை கடவுளுக்கு முன்நிறுத்துவதுமாகும்.
ஒரு காவல் தேவதூதனின் எண்ணமானது, ஒவ்வொரு மனிதனையும் வழிநடத்துவதும், வளர்ப்பதுமாகும். இது கத்தோலிக்கக் கோட்பாடு மற்றும் புனித நூல்களை அடிப்படையாகக் கொண்ட பக்திவிருத்தியாகும்.
மத்தேயு 18:10-ல் இயேசுவின் வார்த்தைகள் இவ்விசுவாசத்தை ஆதரிக்கின்றன:
“இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
இது துறவற மரபுகளின் பிறப்புடன் வளரத் தொடங்கிய நினைவுத் திருநாளாகும். புனிதர் பெனடிக்ட் (Saint Benedict) அதை ஊக்கப்படுத்தினார். மற்றும் 12ம் நூற்றாண்டின் பெரிய சீர்திருத்தவாதியான “கிளைர்வாஸின் புனிதர் பெர்னார்ட்” (Saint Bernard of Clairvaux) தமது நாட்களில் தேவதூதர்களின் பக்தியை எடுத்துக் கொண்டதற்கான சிறந்த சொற்பொழிவாளர் ஆவார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 23: 20-23ய
ஆண்டவர் கூறுவது: வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக் கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது. நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன். ஏனெனில், என் தூதர் உனக்கு முன் செல்வார்.
மறையுரைச் சிந்தனை:
கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவர் காட்டுவழியாக பயணம் மேற்கொண்டார். அது ஓர் அடர்ந்த, கொடிய மிருகங்கள் வாழக்கூடிய காடு. அவர் தன் பயணத்தைத் தொடர்கையில் திடிரென்று இருள்சூழ்ந்து கொண்டது; மழைபெய்யும் அறிகுறிகள் வேறு தென்பட்டன. இடிமுழக்கத்துடன், காட்டுவிலங்குகளின் சத்தமும் ஒருசேர அவரை பீதிக்கு உள்ளாக்கியதால், அவருக்குள்ளே ஒருவிதமான பய உணர்வு ஏற்பட்டது. முடிவில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
அவர் மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது, அவர் செல்லவேண்டிய இடத்தை அடைந்திருந்தார். அவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. என்ன நிகழ்ந்தது என அவர் சிந்தித்த போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது.
”மகனே நீ உன் பயணத்தைத் தொடர்ந்தபோது, அதன் பாதுகாப்பை என்னிடம் ஒப்படைத்துச் செபித்தாய், அக்கணம் முதலே நான் உன்னைப் பின்தொடர்ந்து வந்தேன். நீ பயணித்த பாதையின் பாதச்சுவடுகளை உற்றுப்பார், உன்பின்னே மேலும் இரு பாதப்பதிவுகளைக் காணலாம். நான்காகத் தொடர்ந்த பாதச்சுவடுகள் நீ மயங்கிய இடத்திலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளதை காண்பாய். நீ நிலைகுலைந்து, மயங்கி, நிலத்தில் விழ நான் இடமளிக்கவில்லை. மாறாக, நான் உன்னை என் கரங்களில் தாங்கிக் கொண்டேன். அதன்பின் உன்னால் நடந்து உன் பயணத்தைத் தொடர முடியாததால், என் தோள்களில் உன்னைச் சுமந்துவந்தேன். அந்த இரண்டு பாதச்சுவடுகளும் உன்னுடையதல்ல, உன்னைச் சுமந்த என்னுடையதே. உனக்குத் தெரியாமலே நான் உன்னுடன் பயணித்தேன் என்றது” அந்த அசரீரி.
நீ செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் என்ற இறைவார்த்தையை (திபா 91:11) உறுதி செய்வதாக இருக்கிறது மேலே சொல்லப்பட்ட நிகழ்வு. ஆம், இறைத்தூதர்கள் நம்மை பாதுகாக்கக்கூடியவர்கள்; நமக்குத் துணையாய் இருப்பவர்கள், நம்மோடு வழிநடப்பவர்கள். அப்படிப்பட்ட சிறப்புகளுக்குச் சொந்தக்காரர்களான காவல் தூதர்களின் விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.
திருச்சபையின் தந்தையர் என அழைக்கப்படுகின்ற அகுஸ்தினார், அக்வினாஸ், எரேனியு போன்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்று சொல்வார்கள். ஆனால் விவிலியத்திலே அதற்கான ஆதாரம் கிடையாது. “இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம். கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 18:10) என்னும் இயேசுவின் வார்த்தைகள்தான் காவல்தூதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான மையக் கருவாக இருக்கின்றது.

Comments are closed.