வாசக மறையுரை (அக்டோபர் 02)
பொதுக்காலம் இருபத்து ஆறாம் வாரம்
சனிக்கிழமை
I பாரூக்கு 4: 5-12., 27-29
II லூக்கா 10: 17-24
“தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்ற என்பது பற்றி மகிழ வேண்டாம்”
அகந்தை உள்ளே; ஆண்டவரின் ஆவியார் வெளியே:
பத்தொன்பதாம் நூற்றாண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிறந்தவர் டி.எல்.மூடி என்ற மறைப்போதகர். கடவுளின் வார்த்தையை மிகுந்த வல்லமையோடு அறிவித்த இவர், ஒருமுறை சொன்ன செய்தி இது: “எப்பொழுது ஒருவருடைய உள்ளத்திலிருந்து அகந்தை வெறியேறுகின்றதோ, அப்பொழுது ஆண்டவருடைய ஆவியார் அவருடைய உள்ளத்தில் வந்து குடிகொள்கிறார்.”
டி.எல்.மூடியின் வார்த்தைகள் எத்துணை ஆழமானவை! இன்றைக்குப் பலர் அகந்தயைத் தங்களுடைய உள்ளத்திலிருந்து அகற்றாததால்தான், தங்களிடம் ஆண்டவரின் ஆவியார் இல்லாமல் இருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை ஒருவர் தன்னிடமிருந்து ஆணவத்தை அகற்றிவிட்டுத் தாழ்ச்சியோடு வாழ்ந்தால் அவருக்கு எல்லா ஆசியும் கிடைக்கும் என்ற செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் இயேசுவுக்கு அருளப்பட்டிருந்தது (மத் 28:18). அந்த அதிகாரத்தைக் கொண்டுதான் இயேசு தீய ஆவிகளை விரட்டியடித்தார். அதே அதிகாரத்தால்தான் இயேசு தன் சீடர்களுக்குத் தீய ஆவிகளை ஓட்டுவதற்கான அதிகாரம் அளித்தார். (மத் 10:1). இவ்வாறு இயேசுவிடமிருந்து தீய ஆவியை ஓட்டுவதற்கான அதிகாரத்தைப் பெற்ற சீடர்கள் அந்த அதிகாரத்தைக் கொண்டு தீய ஆவியாரை விரட்டினார்கள்.
இன்றைய நற்செய்தியில், பணித்தளங்களுக்குச் சென்ற இயேசுவின் சீடர்கள் அவரிடம் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்கிறார்கள். அப்பொழுதுதான் அவர்களிடம், “தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம்” என்கிறார். இயேசு தன் சீடர்களிடம் இப்படிச் சொல்லக் காரணம், சீடர்கள் தீய ஆவியை விரட்டியது அவர்களது ஆற்றலால் அல்ல, தான் அளித்த அதிகாரத்தால் என்பதால்தான்.
ஒருவேளை, சீடர்கள் மட்டும் தங்களுடைய சொந்த வல்லமையால்தான் தீய ஆவியை விரட்ட முடிந்தது என்று நினைத்தால், அது அவர்களுடைய உள்ளத்தில் அகந்தையை ஏற்படுத்தி விடும். பின்னர் அவர்களுக்கு இறை வெளிப்பாடு என்பது கிடைக்காமலேயே போய்விடும். ஆகையால், சீடர்கள் தீய ஆவிகள் தங்களுக்குக் கீழ்ப்படிகின்ற என்பது பற்றி அல்ல, தங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றி மகிழுங்கள் என்கிறார். விண்ணகத்தில் ஒருவருடைய பெயர் எழுதப்பட்டிப்பது என்பது மிகப்பெரிய பேறு (பிலி 4:3; எபி 12:23; திவெ 12:27). அத்தகைய பேற்றினை அல்லது மீட்பினை இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் நாம் படிப்பது போல கடவுளால் மட்டுமே அளிக்க முடியும்.
எனவே, நாம் எல்லாம் என்னால்தான் ஆனது என்று தற்பெருமை, ஆணவம் கொள்ளாமல், ஆண்டவராலேயே எல்லாம் முடியும் என்பதில் நம்பிக்கை வைத்துத் தாழ்ச்சியோடு வாழ்வோம்.
சிந்தனைக்கு:
இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே (நீமொ 11:2).
மேன்மை அடையத் தாழ்மையே வழி (நீமொ 18:12).
ஆண்டவரின் கையில் நாம் ஓர் எழுதுகோல் என்பதை உணர்வதே ஆன்மிக வாழ்வின் முதற்படி.
ஆன்றோர் வாக்கு:
‘ஆற்றலின் அடையாளம் தாழ்ச்சி’ என்பார் தாமஸ் மேர்டன். ஆகையால், நம்முடைய உள்ளத்தில் தாழ்ச்சியைத் தரித்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.