இயற்கையை நாம் பாதுகாத்தால், அது நம் அனைவரையும் பாதுகாக்கும்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாத்தல், மனித உரிமைகளை மதித்தல் உள்ளிட்ட மக்களின் நல்வாழ்வுக்காக ஐரோப்பிய ஒன்றிய அவை  மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும், ஐரோப்பாவை மட்டுமல்லாமல், உலகினர் அனைவரையும் கருத்தில் கொண்டதாக இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற அவை, “சூழலியலும் மனித உரிமைகளும்: பாதுகாப்பான, நலமான மற்றும், நீடித்த நிலையான சுற்றுச்சூழல்” என்ற தலைப்பில் நடத்தும் உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 29, இப்புதனன்று, செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் திருப்பீடம் தன் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று, 2014ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் தான் உறுதி கூறியதை, மீண்டும் இச்செய்தி வழியாக குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற நவம்பரில் கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த  COP26 உலக உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பொது அவையின் அடுத்த அமர்வுக்கு உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த செயல்திட்டங்களை, காலதாமதமின்றி உடனடியாக நிறைவேற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இப்பூமிக்கோளத்தின் பாதுகாவலர்கள் என்ற கடமையுணர்வின்றி, அதன் முதலாளிகள் என்று, மனிதர் தங்களையே நினைக்கும்போதெல்லாம், அவர்கள், இந்த உலகோடு தங்களுக்குள்ள சரியான தொடர்பை ஏற்கமாட்டார்கள் என்றும், அவர்கள் வீணாக்கும் அனைத்திற்கும் நியாயம் சொல்வார்கள் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

இயற்கையையும், மற்ற மனிதரையும் வெறும் பொருள்களாக நடத்தும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவர்கள் நியாயம் சொல்வார்கள் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, உண்பதற்காக வாழ்வதில்லை, மாறாக, வாழ்வதற்காக உண்ணுகிறோம் என்ற பழமையான கூற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கையை நாம் பாதுகாத்தால், அது நம் எல்லாரையும் பாதுகாக்கும் என்றும், மனிதர் தங்களின் வாழ்வுப் பாதையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும், தங்களோடும், மற்றவரோடும், சமுதாயத்தோடும், படைப்போடும், கடவுளோடும் உள்ள உறவு பற்றிய புதிய விழிப்புணர்வு அவர்களுக்கு அவசியம் என்றும், திருத்தந்தை பரிந்துரைத்துள்ளார்.

நம் பொதுவான இல்லத்தையும், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் பாதுகாப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கம் என்றால், அவைகளுக்குரிய நடவடிவடிக்கைகளை நாளைவரைத் தள்ளிப்போடாது, நம்பிக்கை, துணிவு மற்றும், விருப்பார்வத்தோடு உடனடியாக திட்டவட்டமான தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.