துயருறும் மக்களுடன் ஒன்றிணைந்து நடக்க வேண்டிய அவசியம்

தங்கள் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறி பிற நாடுகளில் அடைக்கலம் தேடும் மக்களை திறந்தமனதுடன் வரவேற்குமாறு, அனைத்துக் கத்தோலிக்கர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

107வது குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாள் செப்டமபர் 26ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அதே நாளின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும் தங்கள் முற்சார்பு எண்ணங்களையும் அச்சங்களையும் களைந்து, ஒன்றிணைந்து நடைபோடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ளோர், புலம்பெயர்ந்தோர், நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தோர், வர்த்தகப்பொருட்களாக நடத்தப்படுவதால் பாதிக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர் என அனைத்து மக்களுடன் ஆதரவாக ஒன்றிணைந்து நடக்க வேண்டியதன் அவசியத்தை கத்தோலிக்கரிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எவரையும் ஒதுக்கிவைக்காமல், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் அழைக்கப்படுகிறார்கள் என்ற விண்ணப்பத்தையும், இந்த குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளன்று விடுத்தார் திருத்தந்தை.

மேலும், இஸ்பெயின் நாட்டின் La Palma தீவில் இடம்பெற்றுவரும் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தன் ஒருமைப்பாட்டையும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் மாதம் 10ம் தேதி இடம்பெற்ற எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் ஒருமைப்பாட்டையும், அவர்களுக்கான செப அழைப்பையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தீவில் பனிமய மாதா என்ற பெயரில் வணங்கப்பட்டுவரும் அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் எனவும் அழைப்புவிடுத்தார்.

Comments are closed.