மக்களில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புங்கள்
மக்களில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பி, அவர்கள் எதிர்நோக்குடன் வாழ்வதற்கு ஓர் உந்துசக்தியாக, உலகத்தலைவர்கள் செயலாற்றுவதற்கு இப்போதே துவங்கவேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், செப்டம்பர் 21 இச்செவ்வாயன்று கூறினார்.
செப்டம்பர் 14, கடந்த செவ்வாய் முதல், ஐ.நா.வின் 76வது பொது அவை, நியூ யார்க் நகரில் துவங்கியது. செப்டம்பர் 21, இச்செவ்வாய் முதல், உலகத்தலைவர்கள் பலர் 76வது பொது அவையில் பங்கேற்றதையடுத்து, கூட்டேரஸ் அவர்கள் வழங்கிய உரையில், இவ்வுலகில் தற்போது நிலவும் பெரும் பிளவுகள் குறித்து தன் கவலைகளை வெளியிட்டார்.
தற்போது இவ்வுலகில் வாழ்வோர் இதுவரை கண்டிராத நெருக்கடிகளை, கோவிட்-19 பெருந்தொற்று, சுற்றுச்சூழல் பேரிடர், மற்றும், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, ஏமன் போன்ற ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் ஆகியவை உருவாக்கியுள்ளன என்பதை, கூட்டேரஸ் அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
பயன்படுத்தப்படாமல், காலம் கடந்துபோன நிலையில், கோவிட் தடுப்பூசிகள், குப்பையில் கொட்டப்பட்டிருந்தது, தன் மனதை பெரிதும் பாதித்த ஒரு காட்சி என்றும், நாம் வாழும் இன்றைய உலகின் சுயநல, அக்கறையற்ற நிலையை இந்தக் காட்சி படம்பிடித்து காட்டுகிறது என்றும், கூட்டேரஸ் அவர்கள் வருத்தத்துடன் கூறினார்.
முன்னெப்போதும் இல்லாத வண்ணம், மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது, அறிவியலிலும், மனித அறிவுத்திறனிலும் நாம் அடைந்துள்ள வெற்றிகள் என்று கூறிய கூட்டேரஸ் அவர்கள், இந்த சாதனைகளை முறியடிக்கும் வண்ணம், சுயநலத்தாலும், ஒருவரையொருவர் நம்பாமல் இருப்பதாலும், அரசுகளிடையே ஒருங்கிணைந்த அரசியல் முடிவெடுக்கும் மனம் இல்லாமல் போனது, பெரும் வேதனை என்று கூறினார்.
நாம் தற்போது சந்தித்துவரும் பெரும் நெருக்கடிகளின்போது, உறுதியான தீர்வுகள் மிக அவசரமாக, அவசியமாகத் தேவைப்படும் சூழலில், நம்மிடையே உள்ள பெரும் பிளவுகளை முதலில் இணைத்து, சமாதானத்தை நிலைநாட்டுவது நமக்கு முன்னிருக்கும் மிகப்பெரும் தேவை என்று ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் வலியுறுத்திக் கூறினார்.
உலக அமைதி என்பது, பலருக்கு தூரத்துக் கனவாக மாறிவருகிறது என்று கூறிய கூட்டேரஸ் அவர்கள், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, மியான்மார், சிரியா, ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதி ஆகிய எடுத்துக்காட்டுகளை முன்வைத்து, இராணுவ சக்தியைப் பயன்படுத்தி, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் போக்கு கூடிவருவதை குறித்து தன் கவலையை வெளியிட்டார்.
அத்துடன், இவ்வுலகில் இன்றைய பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள இரு நாடுகள் மோதலில் ஈடுபட்டுள்ளன என்பதை தன் உரையில் குறிப்பிட்ட கூட்டேரஸ் அவர்கள், இதன் விளைவாக, உலகிற்குத் தேவையான முன்னேற்ற முயற்சிகளை துவங்க இயலாமல் இருக்கிறோம் என்பதையும் எடுத்துரைத்தார்.
அக்டோபர் 31ம் தேதி கிளாஸ்கோவில் துவங்கவிருக்கும் COP26 காலநிலை உச்சி மாநாட்டிலும், உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதற்குத் தேவையான முயற்சிகளிலும், அனைத்து நாடுகளும், ஒருங்கிணைந்த பார்வையுடன் முடிவுகள் எடுக்கவேண்டும் என்று கூட்டேரஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.
தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் பெருந்தொற்று, மனித சமுதாயத்தில் வேரூன்றியுள்ள பாலின வேறுபாட்டை இன்னும் ஆழப்படுத்தியுள்ளது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அவர்கள், பெருந்தொற்றை தொடர்ந்துவரும் காலங்களில், பாலின சமத்துவத்திற்கும், பெண்களுக்கு தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படுவதற்கும், பெரும் முயற்சிகள் தேவை என்று கூறினார்.
பாலின வேறுபாட்டைப்போலவே, சந்ததியருக்கிடையியே நிலவும் வேறுபாடும் அதிகமாக உள்ளது என்பதை, தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட கூட்டேரஸ் அவர்கள், சுற்றுச்சூழல் சீரழிவை கண்டு மனம் தளர்ந்துள்ள இளையோருக்கு, எதிர்காலத்தின்மீது நம்பிக்கையை வளர்ப்பது, நம் அனைவரின் கடமை என்று கூறினார்.
Comments are closed.