இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய பதிலுரைப்பாடல் எடுக்கப்பட்ட தோபித்து நூல் 13:6-ல், “நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக் கொள்ளார்.” என கூறப்பட்டுள்ளதை வாசித்தோம்.
நாம் ஆண்டவரிடம் என்றும் உண்மையாய் இருந்தால் ஆண்டவர் நம்மை ஒரு போதும் கைவிடார் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார்.” என வாசித்தோம்.
ஆண்டவர் வல்லமையும், அதிகாரத்தையும் பன்னிரு சீடர்களுக்கு மட்டும் அளிக்கவில்லை திருமுழுக்கு பெற்ற நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளார். அளிக்கப்பட்ட வல்லமை முழுமையாக வெளிப்பட்டு பலன்தர நாம் தூய வாழ்வு வாழ வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய நாள் முழுவதும் தூய ஆவியானவர் நமது பேச்சிலும், செயலிலும் நம்மை ஞானத்தோடு வழிநடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை மக்களை அதிகம் பாதிக்காத வகையில் இருக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இந்த ஆண்டு விவசாயிகளுக்குத் தேவையான நல்ல பருவ மழை பெய்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.