செப்டம்பர் 23 : நற்செய்தி வாசகம்

யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9
அக்காலத்தில்
நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், “இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர். வேறு சிலர், “எலியா தோன்றியிருக்கிறார்” என்றனர். மற்றும் சிலர், “முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்” என்றனர்.
ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————
“என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்”
பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் வியாழக்கிழமை
I ஆகாய் 1: 1-8
II லூக்கா 9: 7-9
“என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்”
உங்கள் கோயில் தூய்மையானதா?
பெருநகரில் இருந்த மிகவும் பாரம்பரியமிக்க பங்கு அது. அந்தப் பங்கில் பங்குப் பணியாளராக இருந்தவரைச் சந்திக்கப் புதியவர் ஒருவர் வந்தார். அவர் பங்குப் பணியாளரிடம், “உங்கள் பங்கில் நான் உறுப்பினராகச் சேரவேண்டும்; உங்கள் பங்குக்கோயிலுக்கு வரக்கூடியவர்கள் புனிதமானவர்களா என்று தெரிந்துகொண்டால், உங்கள் பங்கில் உறுப்பினராகச் சேர்ந்துவிடுவேன்” என்றார்
அந்த மனிதர் இவ்வாறு கேட்டது பங்குப் பணியாளருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவர் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “எங்கள் பங்குக் கோயிலுக்கு வருகின்ற எல்லாரும் புனிதமானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. யூதாசு இஸ்காரியோத்து போன்றவர்களும் இருப்பார்கள்; தொடக்கத் திருஅவையில் இருந்தது போன்று சிலையை வழிபடுபவர்கள், பில்லி சூனியம் பார்ப்பவர்கள், பணத்தை வட்டிக்க்குக் கொடுப்பவர்கள், நெறிகேடாக வாழ்பவர்கள் ஆகியோரெல்லாம் இருக்கின்றார்கள். அதனால் எங்கள் பங்குக் கோயிலுக்கு வருகின்றவர்கள் எல்லாரும் புனிதர்கள் கிடையாது” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டுச் சிறிதுநேர இடைவேளைக்குப் பின் பங்குப் பணியாளர் மீண்டும் தொடர்ந்தார்: “நீங்கள் எதிர்பார்ப்பது போல், எந்தப் பங்குக் கோயிலுக்கும் புனிதமானவர்கள் மட்டும் வருவதில்லை. ஒருவேளை நீங்கள் புனிதமானவர்கள் மட்டுமே வருகின்ற ஒரு பங்குக் கோயிலைக் கண்டால், அந்தக் கோயிலுக்குப் போய்விடாதீர்கள். ஏனெனில், தன்னைப் புனிதமானவர் எனக் காட்டிக்கொள்ளும் நீங்கள், மற்றவர்களைக் கெடுத்துவிடுவீர்கள்.”
தனக்கு இப்படியொரு பதில் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திராத அந்த மனிதர் வந்த வேகத்தில் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டார்.
ஒருசிலர் இந்த நிகழ்வில் வரும் ‘புனிதமான மனிதரைப்’ போன்று, கோயிலுக்கு வருகின்ற யாரும் சரியில்லை என்று சொல்லிக்கொண்டு கோயிலுக்கு வருவதுகிடையாது. கோயில் தொடர்பான பணிகளிலும் தங்களுடைய முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது கிடையாது. இத்தகைய சூழ்நிலையில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகம், “என் இல்லத்தை மீண்டும் கட்டி எழுப்புங்கள்” என்ற அறைகூவல் விடுக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்த யூதா நாட்டினர், பிரமாண்டமாகப் கட்டி எழுப்பப்படதிருந்த எருசலேம் திருக்கோயில் அழிந்து போயிருந்ததைக் கண்டு மிகவும் வருந்தினர். அதே நேரத்தில் ஆண்டவரது இல்லத்தைக் கட்டி எழுப்புவதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தனர். மக்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்ததற்கான காரணம், அவர்களது தன்னலம்தான். ஆம், மக்கள் தங்களுக்கென மாட மாளிகைகளைக் கட்டிக்கொண்டு, ஆண்டவரின் இல்லத்தைக் கட்டி எழுப்புவதற்கான காலம் இன்னும் வரவில்லை சொன்னது தன்னலமின்று வேறு என்னவாக இருக்க முடியும்?
இதையெல்லாம் பார்த்துத்தான் அப்போது இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஆகாய், “என் இல்லத்தை மீண்டும் கட்டி எழுப்புங்கள்” என்று ஆண்டவர் கூறுவதாக மக்களுக்கு அறிவிக்கின்றார். இதன்பிறகு ஆண்டவரின் இல்லம் மீண்டுமாகக் கட்டி எழுப்பப்பட்டது.
ஆண்டவர் எல்லா மக்களுக்கும் அருள் பாலிக்கின்றவர். அவரது இல்லம் மக்கள் நடுவில் இருக்கின்றபோது, மக்களுடைய வாழ்வில் பொங்கி வழியும்.. இதை உணர்ந்தவர்களாய் நாம் ஆண்டவரின் இல்லத்தை, அவர் குடிகொண்டிருக்கும் மக்களை கட்டி எழுப்பினால், கடவுளுக்கு அதைவிட மகிழ்சியான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
சிந்தனைக்கு:
 உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் (யோவா 2: 17)
 என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு (எசா 56: 7).
 ஆண்டவர் சீயோனிலிருந்து உனக்கு ஆசி வழங்குவார் (திபா 128: 5)
இறைவாக்கு:
‘படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது’ (திபா 84: 1) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவரின் உறைவிடத்தை, அவரது இல்லத்தைக் கட்டி எழுப்பி, மக்களையும் கட்டி எழுப்பி, அவருக்கு உக்கந்தவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.