புனிதர்கள், இயேசு கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர்கள்
பாவத்தால் எவ்வளவுதான் பலவீனராக இருந்தபோதிலும், அத்தகைய வாழ்க்கையிலும் புனிதத்துவம் மலரமுடியும் என்பதை புனிதர்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 21, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், வெளியிட்ட குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.
திருத்தூதரான புனித மத்தேயுவின் விழாவான இச்செவ்வாயன்று, புனிதர்களை மையப்படுத்தி தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, ஒரே ஆண்டவராகவும், கடவுளுக்கும், மனித சமுதாயத்திற்கும் இடையே ஒரே இடைநிலையாளராகவும் இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் நம்மை கொண்டுசேர்ப்பவர்கள் புனிதர்கள் என்று கூறியுள்ளார்.
நாம் வணக்கம் செலுத்துகின்ற புனிதர்கள், ஆயிரக்கணக்கான பல்வேறு வழிகளில் நம்மை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டுசேர்க்கின்றவர்கள், மற்றும், அவருக்குச் சாட்சிகளாக விளங்குபவர்கள் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
மத்தேயு என்பதற்கு, கடவுளின் கொடை என்று அர்த்தமாகும், அல்பேயுவின் மகனான மத்தேயு, யூதேயாவின் கலிலேயாப் பகுதியில் பிறந்தவர். உரோமைப் பேரரசின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக, சுங்கச்சாவடியில் வரிதண்டி வந்தவர். கிரேக்க, மற்றும், அரமேய மொழிகளில் இவர் புலமை பெற்றிருந்தார்.
நற்செய்தியாளரான மத்தேயு, ஏறக்குறைய 15 ஆண்டுகள் யூதர்கள் மத்தியில் நற்செய்தி பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவர், எத்தியோப்பியா, மாசிடோனியா, பெர்சியா, பார்த்தியா போன்ற பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தவர். இவர், மறைசாட்சியாக உயிர்துறந்தார் என, பாரம்பரியாக நம்பப்பட்டு வருகிறது.
Comments are closed.